கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள ‘பெத்தி’

08 May 2026

ராம்சரண்  நடிப்பில், புச்சி பாபு சனா  இயக்கத்தில் உருவாகி வரும் “பெத்தி” திரைப்படம் குறித்து தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
 
கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட படைப்பு, ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இத்திரைப்படத்தின் கதை முதன்முதலாக கேட்ட தருணத்திலேயே தன்னை ஆழமாக பாதித்துவிட்டதாக  அவினாஷ்  கொல்லா தெரிவித்துள்ளார்.

தனது பத்து வருட சினிமா பயணத்தில் இதுபோன்ற உற்சாகத்தை எந்தக் கதையும் தரவில்லை என்றும், கதை கேட்ட பிறகு சுமார் இருபது நிமிடங்கள் அதிலிருந்து வெளிவர முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். மிக கனமான கதையின் தன்மையை உயிர்ப்பிக்க தயாரிப்பு வடிவமைப்பில் வெகு கவனமுடன் செயல்பட்டதாக கூறியுள்ளார்.

இந்தப் படத்திற்காக ஒரு வருடத்திற்கு மேலாக முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு செட்டிற்கும் முன்பாக சிறிய வடிவங்கள் உருவாக்கப்பட்டு பின்னரே பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளன. மொத்தமாக 24 பெரிய செட்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளதுடன், 60க்கும் மேற்பட்ட கூடுதல் அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் வெளியிடங்களில் படப்பிடிப்பு நடத்துவது சிரமமானதால், தேவையான அனைத்து இடங்களையும் தனியே உருவாக்கி வசதியான சூழலில் படமாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

70 மற்றும் 80களின் பின்னணியில் அமைந்துள்ள இந்தப் படத்திற்காக, விஜயநகரம் பகுதியை முழுமையாக மறுவடிவமைத்துள்ளனர். அந்த காலகட்டத்தின் தெருக்கள், கடிகார கோபுரம், சுற்றுப்புறங்கள் என அனைத்தையும் இயல்பாக மீண்டும் உருவாக்கியுள்ளனர். படம் முழுவதும் உருவாக்கப்பட்ட செட்கள் எதுவும் செட் போல தோன்றக்கூடாது என்பதே தனது நோக்கம் எனவும், அந்த அளவிற்கு இயல்பாக வேலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவினாஷ் குறிப்பிட்டார்.

படத்தில் இடம்பெறும் மல்யுத்த காட்சிகளுக்காக இதுவரை யாரும் பார்க்காத வகையிலான அரங்க அமைப்பு உருவாக்கப்பட்டதாம். குறிப்பாக தரைக்கடியில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட அமைப்பில், கதை நாயகன் பெத்தியாக ராம்சரண் கம்பீரமாக தோன்றும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மேலும், கிரிக்கெட் காட்சிகளும் இயல்பான கிராமத்து உணர்வை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. “லகான்” படத்தைப் போல இல்லாமல், கிராம மக்கள் வயல்வெளி மேடுகளில் அமர்ந்து கிரிக்கெட் பார்க்கும் உணர்வை தரும் வகையில் அந்த காட்சிகள் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

படத்தில் இடம்பெறும் சர்க்கரை ஆலை, ரயில் அமைப்பு, மலையடிவார நகரம் போன்றவை அனைத்தும் செட்களாக உருவாக்கப்பட்டிருந்தாலும், அவை அனைத்தும் உண்மையான இடங்களைப் போலவே தோன்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு பழைய பங்களாவுக்குள் மலையடிவார நகரத்தை உருவாக்கியது மிகப்பெரிய சவாலாக இருந்ததாக அவினாஷ் கூறியுள்ளார்.

Tags: peddi, ram charan

Share via: