‘ஜிகர்தண்டா’ ரீமேக், கார்த்திக் சுப்புராஜ் புகார்

20 May 2015
சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா ஆகியோர் நடித்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் ‘ஜிகர்தண்டா’. மதுரையில் ரவுடியாக இருக்கும் பாபி சிம்ஹாவைப் பற்றி தெரிந்து கொண்டு, அவரைப் பற்றி படம் எடுக்க சித்தார்த் முயற்சிக்க, ஆனால், தன்னையே நாயகனாக ஆக்க வேண்டும் என பாபி சிம்ஹா கட்டளையிட, இதன் பின் நடக்கும் சம்பவங்கள்தான் ‘ஜிகர்தண்டா’ படத்தின் கதை. நல்ல வெற்றியையும், விமர்சனத்தையும் பெற்ற இந்தப் படம் பாபி சிம்ஹாவிற்கு தேசிய விருதைதயும் வாங்கிக் கொடுத்தது. இப்போது ஹிந்தி ரீமேக் விவகாரத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கும், தயாரிப்பாளர் கதிரேசனுக்கும் புதிய பிரச்சனை எழுந்துள்ளது. ஏற்கெனவே, படத்திற்கு ‘யு’ சர்டிபிகேட் வாங்கும் விவகாரத்தில் அவர்களிருவரும் பட வெளியீட்டின் போது சண்டையிட்டுக் கொண்டனர். கார்த்திப் சுப்புராஜின் பிடிவாதத்தால் தனக்கு பல கோடி நஷ்டம் என தயாரிப்பாளர் கதிரேசன் தெரிவித்திருந்தார். இப்போது தனக்குத் தெரியாமல் படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் விற்று விட்டார் என கார்த்திக் சுப்புராஜ் இயக்குனர்கள் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Share via: