அப்பாவிடம் சண்டை போட்டு நடித்தேன் - சக்திவாசு
04 Jan 2017
தமிழ் சினிமாவில் இயக்குனர்களின் மகன்கள் பலரும் நாயகர்களாக அறிமுகமானார்கள். அவர்களில் முன்னணி இயக்குனரான பி.வாசுவின் மகன் சக்தி வாசுவும் ஒருவர்.
குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்தவர் ‘தொட்டால் பூ மலரும்’ படத்தில் நாயகனாக அறிமுகமானார். அதன் பின் அவர் நடித்த படங்களில் ‘நினைத்தாலே இனிக்கும்’ படம் நல்ல வெற்றியைப் பெற்றது.
கடந்த வருடம் சக்திவாசு நடித்த ‘தற்காப்பு’ படம் வெளிவந்தது.
கிடைத்த வாய்ப்புகளில் ஏன் தவறவிட்டு விட்டீர்கள் என அவரிடம் கேட்ட போது,
“அப்போதெல்லாம் எனக்குத் தேவையான கதாபாத்திரங்களை சரியாகத் தேர்ந்தெடுக்கத் தவறிவிட்டேன். ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்திற்குப் பிறகு நான் நடித்த சில படங்கள் சரியாக பிரமோஷன் செய்யப்படவில்லை. சில படங்களில் நான் நடித்த கதாபாத்திரங்கள் எனக்குப் பொருத்தமாக அமையவில்லை.
இந்த ‘சிவலிங்கா’ படத்தில் நான் நடித்துள்ள கதாபாத்திரம் எனக்கு ஒரு பெரிய பெரைப் பெற்றுத் தரும்.
இந்தப் படத்திற்கான கதை விவாதத்தில் நானும் கலந்து கொண்டேன். அப்போதே அப்பாவிடம் இந்தக் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் எனக் கேட்டேன். அவரும் இனிமேல்தான் பார்க்க வேண்டும் என்றார். உடனே, நான் ஏன் நான் நடிக்கக் கூடாதா என அவரிடம் சண்டை போட்டேன்.
முதலில் இந்தப் படம் கன்னடத்தில் எடுக்கப்பட்டது. அதனால், நான் கன்னடம் பேசுவேனா என அவர் சந்தேகப்பட்டார். நீளமான வசனங்களைக் கூட நானே பேசி நடித்தேன். கன்னடத்தில் என்னுடைய நடிப்புக்கு மிகப் பெரிய பாராட்டுக்கள் கிடைத்தது.
தமிழில் ரீமேக் செய்ய ஆரம்பித்த போதே, ராகவா லாரன்ஸ் மாஸ்டர் அப்பாவிடம் எனது கதாபாத்திரத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று சொன்னார். தமிழில் நான் படம் முழுவதும் வரும் கதாபாத்திரத்தில்தான் நடித்துள்ளேன்.
எனது கதாபாத்திரம் நன்றாகப் பேசப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இனிமேல், சரியாகத் தேர்வு செய்து நல்ல கதாபாத்திரங்களில்தான் நடிப்பேன்,” என்கிறார் சக்திவாசு.