‘காப்பி’ அடித்ததா ?, சர்ச்சையில் ‘பாகுபலி 2’ புதிய போஸ்டர்

27 Feb 2017
சமூக வலைத்தளங்கள் வந்தாலும் வந்தது, கருத்துச் சுதந்திரத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. எதை வேண்டுமானாலும், எதைப் பற்றி வேண்டுமானாலும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோர் கருத்து சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அரசியல், சினிமா துறையைச் சேர்ந்தவர்கள்தான் அதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். திரைப்பட இயக்குனர்கள் தங்களது கற்பனையில் உருவானவற்றை திரை வடிவமாகக் கொண்டு வருவதற்குள் பல விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. ‘பாகுபலி’ என்ற படத்தை எடுத்து இந்தியத் திரையுலகத்தையே வியக்க வைத்தவர் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி. மகா சிவராத்திரி அன்று ‘பாகுபலி 2’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டார். ஒரு யானை மீது படத்தின் நாயகன் பிரபாஸ் கம்பீரமாக ஏறி நிற்கும் அந்தப் புகைப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. யு டியூபில் கூட தற்போது வரை 5 மில்லியனைக் கடந்து வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக ‘பாகுபலி 2’ படத்தின் புதிய போஸ்டர், டோனி ஜா நடித்து 2008ம் ஆண்டு வெளிவந்த  தாய்லாந்து படமான ‘ஓங் பாக் 2’ படத்தின் போஸ்டரைப் பார்த்து காப்பி அடிக்கப்பட்டது என சமூக வலைத்தளங்களில் கருத்து பரவி வருகிறது. ‘பாகுபலி’ படத்தையே தமிழில் எம்ஜிஆர் நடித்து வெளிவந்த ‘அடிமைப் பெண்’ படத்தின் இந்தக் காலத் தழுவல்தான் என படம் வெளிவந்த போது எம்ஜிஆர் ரசிகர்கள் பலரும் தெரிவித்து குறிப்பிட வேண்டிய ஒன்று. ‘பாகுபலி 2’ படம் வெளிவருவதற்குள் இன்னும் என்னென்ன சர்ச்சைகள் எழப் போகிறதோ...?  

Share via: