‘மிஷன் சாப்டர் 1’ - லண்டன் சிறையில் ஒரு மிஷன்
12 Jul 2023
விஜய் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபிஹாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மிஷன் சாப்டர் 1’.
லண்டனில் உள்ள ஒரு சிறையில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ளது இப்படம். லண்டனில் நடக்கும் கதையாக இருந்தாலும், சென்னையில் போடப்பட்ட லண்டன் சிறைச்சலை செட் படத்தில் பிரமிக்க வைக்கும் விதத்தில் இருக்குமாம். சுமார் 5 கோடி ரூபாய் செலவில் 4.5 ஏக்கர் நிலப்பரப்பளவில் போடப்பட்ட அந்த செட் மழை மற்றும் புயலால் இரண்டு முறை பாதிப்படைந்து பிறகு மீண்டு புதுப்பிக்கப்பட்டதாம்.
அதுமட்டும் இன்றி, சிறைச்சாலையில் கைதிகளாக இருக்கும் 250 வெளிநாட்டினரை சென்னைக்கு அழைத்து வந்து நடிக்க வைத்ததும் பெரும் சவாலாக இருந்ததாக, கூறிய இயக்குநர் விஜய், அந்த சவால்களை சமாளித்து தற்போது வெற்றிகரமாக படத்தை முடித்ததற்கு ஸ்ரீ சீரடி சாய் மூவிஸ் நிறுவன தயாரிப்பாளர் ராஜசேகர் சார் முக்கிய காரணம், என்கிறார் படத்தின் இயக்குனர் விஜய். அவர்படம் பற்றி மேலும் பேசுகையில்,
“இப்படத்திற்கு முதலில் அச்சம் என்பது இல்லையே’ என்று தலைப்பு வைத்திருநதோம். ஆனால், தற்போது அந்தத் தலைப்பு மாற்றப்பட்டு ‘மிஷன் - சாப்டர் 1’ என்று வைத்துள்ளோம். படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் குழுவினரும், சுபாஸ்கரன் சாரும் பார்த்தார்கள். படத்தை பார்த்ததும் படம் மிகப்பெரிய ஆக்ஷன் படமாக இருக்கிறது, நிச்சயம் படத்தை தமிழ் மட்டும் அல்லாது தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியிடலாம் என்று சொன்னார்கள். அதேபோல், தற்போது இருக்கும் தலைப்பு தமிழுக்கு சரியாக இருக்கும், ஆனால் மற்ற மொழிகளில் சரியாகப் பொருந்தாது, அதேபோல் வைரலான தலைப்பாகவும் இருக்க வேண்டும், என்று விரும்பினார்கள். அதனால் தான் ‘மிஷன் - சாப்டர் 1’ என்ற தலைப்பு வைத்தோம்.
அருண் விஜய் சாருடன் படம் பண்ணுவதற்கு பேசிக்கொண்டிருந்தேன், அப்போது தான் இந்த கதை பண்ணலாம் என்று தோன்றியது. படம் முழுவதும் ஆக்ஷன் தான், ஆனால் அதை எமோஷனலாகவும் சொல்லியிருக்கிறேன். இப்படி ஒரு பலமான ஆக்ஷன் கதையை யாரை வைத்து பண்ணுவது என்று யோசித்த போது தான் அருண் சார் நினைவுக்கு வந்தார். உடனே அவரிடம் கதையை சொல்லி, இந்த கதையை நீங்கள் செய்தால் சரியாக இருக்கும் என்றேன், அவரும் சம்மதித்தார்.
படத்திற்குள் அவர் வந்த பிறகு எந்த விஷயத்தை பற்றியும் கவலைப்படவில்லை. ஆக்ஷன் காட்சிகளில் டூப் போடலாம் என்று சொன்னால் கூட, இல்ல சார், நானே செய்கிறேன், என்று சொல்லி நடிப்பார். படப்பிடிப்பில் பல முறை அவருக்கு காயம் ஏற்பட்டது.
லண்டனில் பேருந்து ஒன்றில் சண்டைக்காட்சி படமாக்கினோம், அந்த சண்டைக்காட்சியில் அவரது காலில் அடிபட்டு வீங்கிவிட்டது. மிகப்பெரிய பாதிப்பாக இருந்தாலும், அறுவை சிகிச்சை செய்யாமல், சில நாட்கள் சிகிச்சை மற்றும் ஓய்வுக்குப் பிறகு நடித்தார். அப்போதும் சண்டைக்காட்சிகள் தான் படத்தில் இருக்கும். ஆனால், அவர் எந்த இடத்திலும் முடியாது, என்று சொல்லாமல் நடித்தார்.
ஒரு முறை டம்மி சங்கிலி சரியில்லை என்றதுமே, ஒரிஜினல் சங்கிலியை கையில் சுற்றிக்கொண்டு சண்டைப்போட வைத்தோம், அந்த சங்கிலி மிகப்பெரியதாக இருக்கும், அதை அவர் கையில் கட்டிக்கொண்டு சண்டைக்காட்சியில் நடித்த போது கையில் இரத்தம் வடிந்தது. ஆனால், அவர் அந்த காட்சியில் நடித்தார். அவர் கையில் இரத்தம் வருவதை நான் பார்த்தாலும், காட்சியை பாதியில் நிறுத்தாமல் தொடர்ந்து படமாக்கினேன், எனக்கும் அது தர்மசங்கடமாக இருந்தது, ஆனால் அவர் அந்த வலியை தாங்கிக்கொண்டு நடித்துக் கொடுத்தார். அவருடைய அப்படி ஒரு அர்ப்பணிப்பால் தான் படம் சிறப்பாக வந்திருக்கிறது,” என்றார் இயக்குனர் விஜய்.
நடிகர் அருண் விஜய் பேசுகையில்,
“விஜய் சாருடன் இணைந்து பணியாற்ற இருந்த போது, மதராசப்பட்டினம் போல ஒரு பெரிய படமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அப்போது தான் அவர் இந்தக் கதையை சொன்னார். கதை நன்றாக இருந்தது, அதேபோல் படத்தில் ஆக்ஷனோடு எமோஷனும் இருந்தது. அவரும் இந்த படம் செய்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னதால் படத்தில் நடித்தேன். படம் முடிந்துவிட்டது, மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. படம் முழுவதும் ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் என்று சொல்வதை விட, படம் முழுவதிலும் ஆக்ஷன் மூட் இருக்கும். அது ரசிகர்களுக்கு சிறப்பான தியேட்டர் அனுபவத்தை கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ஹரி சாருடன் யானை போன்ற கமர்ஷியல் படம் பண்ணேன், இப்போது பாலா சார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறேன். இந்தப் படத்திலும் கடினமாக உழைத்திருக்கிறேன். இப்படி ஒவ்வொரு படத்திலும் உடலை வருத்திக்கொண்டு நடிப்பது எனது வீட்டில் இருப்பவர்களுக்கு கஷ்டமாக இருந்தாலும், அனைத்து விதமான வேடங்களில் நடிப்பதோடு, பெரிய பெரிய இயக்குநர்களின் படங்களில் பணியாற்ற வேண்டும் என்பது தான் என் விருப்பம். அதற்காகத் தான் இப்படி கடினமாக உழைக்கிறேன், இனியும் இது தொடரும்,” என்றார்.
Tags: mission chapter 1, vijay, arun vijay, amy jackson, gv prakashkumar