விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நேற்று வெளியான படம் ‘மாஸ்டர்’.
கொரானோ தொற்று காரணமாக தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் அனைத்துத் தியேட்டர்களிலும் நேற்று 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
50 சதவீத இருக்கைகள்தான் என்றாலும் பெரும்பாலான மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் அனைத்துத் தியேட்டர்களிலும், பல ஊர்களில் உள்ள அனைத்துத் தியேட்டர்களிலும் ‘மாஸ்டர்’ படம்தான் நேற்று திரையிடப்பட்டது.
அதன் காரணமாக முதல் நாள் வசூலாக 25 கோடி வரை வசூலித்துள்ளது. இந்தத் தொகையை படத்தின் தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுவரை எந்த ஒரு படத்திற்கும் இப்படி முதல் நாள் வசூலை யாரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது இல்லை.
கொரானோ தளர்வுகளுக்குப் பிறகு நவம்பர் 10ம் தேதி தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் கடந்த இரண்டு மாதங்களாக மக்கள் தியேட்டர்கள் பக்கம் வரவில்லை. அதை ‘மாஸ்டர்’ படம்தான் மாற்றும் என தியேட்டர்காரர்கள் நம்பிக்கையுடன் இருந்தார்கள். அவர்களது நம்பிக்கை வீண் போகவில்லை.
படம் பற்றி நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் இந்த பொங்கல் விடுமுறை நாட்களில் பலரும் ஏற்கெனவே முன்பதிவு செய்துவிட்டார்கள். எனவே, அடுத்த நான்கு நாட்களில் இந்தப் படம் மேலும் பல கோடிகளை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் நாள் வசூலை அறிவித்தது போலவே இனி வரும் நாட்களிலும் வசூல் தொகையை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.