தமிழ்நாட்டில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ வசூல் மழை

02 Mar 2024

தமிழ்நாட்டில் மலையாள படமான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் வசூல் மழையை பொழிந்து வருகிறது.

சிதம்பரம் இயக்கத்தில் சவுபின் ஷாயிர், ஸ்ரீநாத் பாஷி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பிப்ரவரி 22-ம் தேதி வெளியான இந்த மலையாளப் படத்துக்கு தமிழில் மாபெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

குணா குகை, குணா படத்தின் பாடல், இளையராஜா பாடல்கள் என தமிழ் மக்களுக்கு நெருக்கமாக இந்தப் படம் அமைந்திருக்கிறது. மேலும், தமிழில் வெளியான புதிய படங்களுக்கான டிக்கெட் முன்பதிவினை விட ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் டிக்கெட் முன்பதிவு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாள படங்கள் என்றாலே சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களில் சில திரையரங்கில் மட்டுமே திரையிடுவார்கள். ஆனால், இந்தப் படத்துக்கு பல்வேறு மாவட்டங்களில் உள்ள சிறு திரையரங்கில் கூட திரையிட்டுள்ளார்கள்.

இதுவரை உலகளவில் சுமார் 60 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. அடுத்த வாரத்துக்குள் 100 கோடி வசூலைத் தாண்டும் என்று வர்த்தக நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். 

இன்று (மார்ச் 2) கேரளாவில் டிக்கெட் முன்பதிவின் மூலம் 1.1 கோடி கிடைத்திருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் இன்றைய டிக்கெட் முன்பதிவின் மூலம் மட்டுமே 1.5 கோடி கிடைத்திருக்கிறது. அந்தளவுக்கு ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்துக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது.

சென்னையில் உள்ள மாயாஜால் திரையரங்கில் மட்டும் இன்று (மார்ச் 2) 30 காட்சிகள் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரையிடப்படவுள்ளது. இப்போதே தமிழகத்தில் மலையாள படங்களின் வசூல் பட்டியலில் முதல் இடத்தினை பிடித்திருக்கிறது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. 

புதிய படங்களின் வசூலை விட இந்தப் படத்தின் வசூல் அதிகமாகி இருப்பதால் திரையரங்க உரிமையாளர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

Tags: manjummel boys

Share via: