உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் ‘மனிதன் தெய்வமாகலாம்’

11 Mar 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் விஜயா சதிஷ் & ஆர்.எஸ். சதிஷ் தயாரிப்பில், ‘தூக்குதுரை’ & ‘ட்ரிப்’ படங்களை இயக்கிய டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், இயக்குநர் செல்வராகவன் முதன்முறையாக முழு நாயகனாக நடிக்கும் படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’.

முதல் பார்வை போஸ்டர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், சமீபத்தில் வெளியான டீசர் 2 மில்லியன் வியூஸைத் தாண்டி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சில நொடிகளில் முடியும் டீசரில், செல்வராகவனின் ஒற்றைக் கேள்வி, அதற்கு மறைந்திருக்கும் பதில், எளிய மனிதனாகத் தோன்றி இரத்தக்கறையுடன் மாறும் தோற்றம், அவரை விரும்பும் பெண்ணின் காதல்... இந்த எல்லாம் சேர்ந்து, ஒரு சாதாரண மனிதனின் வாழ்வியலை இரத்தமும் சதையுமாகச் சொல்லும் படம் என்பதை உணர்த்தியிருக்கிறது. பார்வையாளர்கள் “டீசர் பார்த்ததும் படம் பார்க்க ஆவல் அதிகமாகி விட்டது” என கமெண்டுகளில் பெரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் மற்றும் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தயாரிப்பாளர் ஆர்.எஸ். சதிஷ் ஆகியோர் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்தனர்.

படம் பற்றி இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் பேசியதாவது,

“ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை எழுதியிருக்கிறேன். ஒரு சாதாரண மனிதன், ஒரு சின்ன உதவியோ அல்லது வேறு ஒரு காரணத்தாலோ சக மனிதர்களுக்கு தெய்வமாகத் தெரிவான். இந்தப் படத்தின் ஹீரோவும் அப்படித்தான் ஒரு சம்பவத்தால் தெய்வமாகிறார்.

டீசரில் ‘தெய்வம் கொல்லும்’ என்று வருவதால் இது பழி தீர்க்கும் படம் என்று நினைக்க வேண்டாம். சாதாரண மனிதன் கொலை செய்தால் அது குற்றம். ஆனால் தெய்வம் செய்தால் அது தண்டனை. அப்படிப்பட்ட தண்டனையை ஹீரோ கொடுக்கிறார். யாருக்கு? எதற்கு? படம் பார்த்தால் புரியும்.

இந்தப் படம் பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறது. ஆனால் பாலியல் குற்றங்களைப் பற்றி அல்ல. வேறு ஒரு முக்கிய விஷயத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு தேவை என்பதை வலியுறுத்தியிருக்கிறோம். அது அனைவரின் வாழ்விலும் ஒரு கட்டத்தில் நடக்கக்கூடிய விஷயம். அது எப்படி ஒரு குடும்பத்தைப் பாதிக்கிறது, ஒரு ஊரின் பிரச்சனையாக மாறுகிறது என்பதை எதார்த்தமாகச் சொல்லியிருக்கிறோம்.”


ஒரு அமைதியான கிராமத்து மனிதனாக, எத்தனை முறை அடித்தாலும் எழுந்திருக்க முடியாத பலவீனமான மனிதனாக இருக்க வேண்டும். அந்த கதாபாத்திரத்துக்கு செல்வா சார் தான் சரியானவர் என்று தோன்றியது. கதை சொன்னபோது அவர் சில நாட்கள் நேரம் எடுத்து முழு திரைக்கதையையும் படித்துவிட்டு ‘இந்தக் கதையில் வாழ்வியல் இருக்கிறது, நிச்சயம் சொல்ல வேண்டும்’ என்று சொல்லி முழு ஒத்துழைப்பு கொடுத்தார். இது அவரது முதல் முழு ஹீரோ படம்.”

கதாநாயகியாக கன்னடப் படங்களில் நடித்திருக்கும் குஷி ரவி தமிழில் அறிமுகமாகிறார். செல்வராகவனின் மாமா கதாபாத்திரத்தில் தயாரிப்பாளரான ஆர்.எஸ். சதிஷ், மனைவி கதாபாத்திரத்தில் கெளசல்யா, ஊட்டி சிறுமி லிர்த்திகா உள்ளிட்ட அனைவரும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.

சேலம் மாவட்டம் நகரமலை என்ற மலைகள் சூழ்ந்த கிராமத்தில் முழு படப்பிடிப்பையும் நடத்தினோம். அங்கு இதுவரை எந்தப் படமும் படமாக்கப்படவில்லை. அந்த கிராம மக்களையே படத்தில் நடிக்க வைத்திருக்கிறோம். அதனால் படம் முழுக்க எதார்த்தமான வாழ்வியலை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கும்.

தயாரிப்பாளர் ஆர்.எஸ். சதிஷ் பேசியதாவது,

“ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தை எதார்த்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். செல்வராகவன், குஷி ரவி, கெளசல்யா, லிர்த்திகா உள்ளிட்ட அனைவரும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். விழிப்புணர்வு மட்டுமல்ல, அழகான குடும்பக் காதலைப் பேசும், குடும்பத்துடன் பார்க்கும் ஒரு அருமையான படைப்பாக இந்தப் படம் இருக்கும்,”என்றார்

படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Tags: manidhan deivamagalam, dennis manjunath, selvaraghavan

Share via: