பாலா என்னை அடித்தாரா? – மமிதா பைஜு விளக்கம்
01 Mar 2024
பாலா தன்னை அடித்தார் என்று வெளியான தகவலுக்கு மமிதா பைஜு விளக்கம் அளித்துள்ளார்.
மலையாளத்தில் பெரும் வரவேற்பு பெற்ற ‘பிரேமலு’ படத்தில் நாயகியாக நடித்தவர் மமிதா பைஜு.
அந்தப் படத்தினை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில் தமிழில் ‘வணங்கான்’ படப்பிடிப்பில் என்ன நடந்தது என்பது குறித்து பேசியிருந்தார்.
அதில் “’வணங்கான்’ படத்தில் ‘வில்லடிச்சா மாடன்’ என்ற ஒரு கலை இருந்தது. அதில் அனுபவம் இல்லாததால் கற்றுக் கொண்டு நடித்தேன். 3 டேக்குகள் எடுத்ததால் நிறைய திட்டினார் பாலா சார். ஆனால் முன்னரே நான் ரொம்ப திட்டுவேன் என்றும் கூறியிருந்தார்.
ஆனால் அவர் திட்டியது காயப்படுத்தியது. அவர் என்னை முதுகில் அடிக்கவும் செய்தார்” என்று வீடியோ பேட்டியின் பகிர்வில் கூறியிருந்தார் மமிதா பைஜு.
‘வணங்கான்’ படத்தினை முதலில் சூர்யா, மமிதா பைஜு உள்ளிட்டரோரை வைத்து தான் தொடங்கினார் பாலா. பின்பு பாலா – சூர்யா இருவருக்கும் ஏற்பட்ட மனகசப்பில் இந்தப் படம் கைவிடப்பட்டு, தற்போது அருண் விஜய்யை வைத்து இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
மமிதா பைஜு பேசிய வீடியோ பதிவு இணையத்தில் பெரும் வைரலானது. இயக்குநர் பாலா இன்னும் திருந்தவே இல்லை என்று பலரும் திட்டித் தீர்த்தனர்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் விளக்கம் அளித்துள்ளார் மமிதா பைஜு. அதில் ”அந்தப் பேட்டியில் ஒரு சிலவற்றை மட்டும் தெளிவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.
பாலா சாருடன் முதற்கட்டப் பணிகள் மற்றும் தயாரிப்பு உள்ளிட்டவற்றில் இணைந்து பணிபுரிந்துள்ளேன். அவர் என்னை ஒரு சிறந்த நடிகையாக மற்ற உதவி புரிந்தார்.
அப்போது என்னை மனரீதியாகவோ, உடல் ரீதியாகவோ எந்தவொரு தீங்கும் நடைபெறவில்லை. மற்ற படத்தின் பணிகள் பாதிக்கப்பட்டதால் மட்டுமே ‘வணங்கான்’ படத்திலிருந்து வெளியேறினேன்” என்று தெரிவித்துள்ளார்.
Tags: mamitha baij, suriya, bala ,vanangan