சீயான் 62 மூலம் தமிழில் அறிமுகமாகும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு

03 Mar 2024

மலையாள திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான கேரள மாநில விருதை மூன்று முறை வென்றவரும், 2016ம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றவருமான நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு, 'சீயான் 62' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

'சீயான்' விக்ரம் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில், இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் 'சீயான் 62' எனும் திரைப்படம் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு லேட்டஸ்ட்டாக இணைந்திருக்கிறார். மேலும் இவரின் நடிப்பில் வெளியான 'ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன்', 'டிரைவிங் லைசன்ஸ்', 'ஜன கன மன', 'த கிரேட் இந்தியன் கிச்சன்' ஆகிய படங்களிலும் இவரது தனித்துவமான நடிப்பு அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டை பெற்றது. இதனைத் தொடர்ந்து இவர் முதன் முறையாக தமிழில் 'சீயான் 62' படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.

'சீயான்' விக்ரம்- எஸ். ஜே. சூர்யா -சுராஜ் வெஞ்சாரமூடு என தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த விருது பெற்ற நட்சத்திர கலைஞர்கள் ஒன்றிணைந்திருப்பதால் 'சீயான் 62' படத்திற்கு ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

மேலும் இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்கவுள்ளதாகவும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Tags: Malayalam,Suraj Venjaramoodu, Chiyaan Vikram

Share via: