அதிகரிக்கும் வசூல்: ‘மகாராஜா’ படக்குழு குஷி
17 Jun 2024
’மகாராஜா’ படத்தின் வசூல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், படக்குழு பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது.
நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் கஷ்யாப், அபிராமி, நட்டி, சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மகாராஜா’. பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இது விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள 50-வது படமாகும்.
இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியான உடன், பெரும் எதிர்பார்ப்பு உருவானது. மேலும் விமர்சகர்களும் இந்தப் படத்துக்கு பெரும் வரவேற்பு அளித்தார்கள். இதனை முன்வைத்து டிக்கெட் புக்கிங் அதிகரிக்கத் தொடங்கியது.
முதல் நாளில் சுமார் 3.38 கோடி ரூபாய் வசூல் செய்தது. ஆனால் முதல் நாளை விட இரண்டாம் நாளின் வசூல் 2 மடங்காக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்று வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஏனென்றால், அனைத்து திரையரங்குகளிலுமே சுமார் 70% புக்கிங் இருக்கிறது. அவை படம் திரையிடும் சமயத்தில் ஃபுல்லாகி விடும் என தெரிவித்துள்ளார்கள்.
இப்போதுள்ள சூழல்படி ‘மகாராஜா’ படத்தின் முதல் வார சூழலே, தமிழக விநியோகஸ்தர்கள் அனைவருக்குமே லாபகரமாக இருக்கும் என்று தெரிகிறது. நாளை (ஜுன் 17) விடுமுறை என்பதால் இன்னும் விநியோகஸ்தர்களுக்கு ஜாக்பாட் ஆக அமையும் என்கிறார்கள்.
Tags: maharaja, vijay sethupathi