‘குட்டி ஸ்டோரி’ - 4 இயக்குனர்கள் சொல்லும் காதல் கதைகள்
05 Feb 2021
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர்ஐசரி.K. கணேஷ் தயாரித்துள்ள படம் ‘குட்டி ஸ்டோரி’.
ஒரே படத்தில் நான்கு இயக்குனர்கள் தனித்தனியாக நான்கு குட்டிக் காதல் கதைகளை இயக்கியுள்ள படம் இது.
ஒரு படத்திலேயே, முதல் முறையாக நான்கு முன்னணி இயக்குனர்கள் இணைந்து இப்படியான படத்தை இயக்கியுள்ளனர்.
முதல் தொகுப்பை கௌதம் வாசுதேவ் மேனன், இரண்டாவது தொகுப்பை விஜய், மூன்றாவது தொகுப்பை வெங்கட் பிரபு, நான்காவது தொகுப்பை நலன் குமாரசாமி ஆகியோர் இயக்கியுள்ளனர்.
கௌதம் மேனன் இயக்கியுள்ள கதையில் அவரே நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். விஜய் இயக்கியுள்ள கதையில் மேகா ஆகாஷ் நாயகியாகவும் அமிதாஷ் பிரதான் கதாநாயகனாகவும் நடித்துள்ளனர். வெங்கட் பிரபு இயக்கியுள்ள கதையில் வருண், சங்கீதா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். நலன் குமாரசாமி இயக்கியுள்ள கதையில் விஜய் சேதுபதி, ‘அருவி’ அதிதி பாலன் நடித்துள்ளனர்
‘குட்டி ஸ்டோரி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் தயாரிப்பாளர் ஐசரி .K. கணேஷ் பேசுகையில்,
“நீண்ட இடைவேளைக்குப் பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த குறும்பட கான்செப்ட்டை என்னிடம் சொன்னவுடன் எனக்கு பிடித்தது. இது ஆந்தாலஜி மெத்தட் என்பதால் புதிதாகத் தோன்றியது, உடனே ஒப்புக்கொண்டேன்.
முதல் முறையாக நான்கு பெரிய இயக்குனர்கள் இணைந்து இதை உருவாக்க உள்ளனர் என்றதும் இந்தப் படத்தின் மீதான ஈர்ப்பை அதிகப்படுத்தியது. இந்த படத்தை தியேட்டரில் வெளியிடுகிறோம். காதலர் தினத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி படம் வெளியாகிறது. பெரிய படங்களுக்கு இணையாக இதற்கும் பட்ஜெட் ஒதுக்கி எடுத்துள்ளோம்,” என்றார்.
இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் பேசுகையில்,
“நான் கொரோனா லாக் டவுன் காலகட்டத்தில் பல குறும்படங்களை இயக்கினேன். அதிலும் காதல் கதை படங்களை இயக்குவது பிடித்ததாக இருந்தது. இந்த கான்செப்ட் பற்றி என்னிடம் கூறியதும் முதலில் நான்கு இயக்குனர்களும் ஒன்றாகப் பேசி அவரவர் கதைகளை முடிவு செய்தோம். நான்கு கதைகளும் வித்தியாசமாக அமைந்தது. என்னுடைய கதையை நான்கே நாட்களில் படமாக்கினேன். கதாநாயகியாக அமலா பால் நடித்துள்ளார். முதலில் நான் நடிப்பதாக இல்லை, அதன்பிறகு கதையை முடித்தவுடன் நானே நடிக்க முடிவு செய்தேன், படம் நன்றாக வந்துள்ளது,” என்றார்.
இயக்குனர் விஜய் பேசுகையில்,
“முதலில் நாங்கள் நான்கு பேரும் சேர்ந்து இதுபோன்ற ஒரு காதல் கதை படத்தை இயக்கப் போகிறோம் என்றதும் எதிர்பார்ப்பு அதிகமானது. மற்ற இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றும் போது அவர்களுடைய ஸ்டைலை என்னால் கற்றுக்கொள்ள முடிந்தது. இந்த கதைக்கு யாரை நடிக்க வைக்கலாம் என யோசித்தபோது மேகா ஆகாஷ் பொருத்தமாக இருப்பார் எனத் தோன்றியது. உடனே அவரிடம் கதையை சொன்னேன் அவரும் நடிக்க ஒப்புக் கொண்டு நடித்துக்கொடுத்தார். நான் ஏழு நாட்களில் இந்தக் கதையை படமாக்கினேன், முழுக்க முழுக்க சென்னையிலேயே எடுத்துள்ளோம்,” என்றார்
இயக்குனர் வெங்கட் பிரபு பேசுகையில்,
“முதலில் நாங்கள் நான்கு பேரும் இணைந்து இந்த ஆந்தாலஜி படத்தை உருவாக்கி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அதிலும் என் கதை அனிமேஷன் விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அதில் காதலும் கலந்து சொல்லியுள்ளேன். ஒரு குறும்படத்திற்குத் தேவையான எல்லா அம்சங்களும் இதில் உள்ளது. எனக்கும் இது ஒரு புது வித அனுபவத்தை தந்துள்ளது,” என்றார்
இயக்குனர் நலன் குமாரசாமி பேசுகையில்,
“லாக் டவுன் முடிந்தவுடன் எனது புதிய படத்தைத் தொடங்க திட்டமிட்டு இருந்தேன். அதற்கு முன்பாக இந்த குறும்பட வாய்ப்பு வந்தது. எனக்கும் அந்த படத்துக்கு முன்னர் இதை இயக்கினால் என்னை தயார்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் ஒப்புக்கொண்டேன். இந்தக் கதையை எழுதியவுடன் என் நண்பர் விஜய் சேதுபதியிடம் யாரை நடிக்க வைக்கலாம் எனக் கேட்டேன். அவர் இந்தக் கதை பிடித்துள்ளது நானே நடிக்கிறேன் என்று கூறி நடித்துக் கொடுத்தார். மற்ற இயக்குனர்கள் அவர்களுக்கான கதையை குறிப்பிட்ட நாட்களில் முடித்துக் கொடுத்தனர். நான் கொஞ்சம் அதிகமாக நாட்களை எடுத்துக்கொண்டேன். 11 நாட்கள் மிகவும் சிரமப்பட்டு இந்த கதையை முடித்தேன். ஒரு புது அனுபவத்தை தந்துள்ளது இயக்குனர் கௌதம் மேனனும் படப்பிடிப்பின்போது சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து படப்பிடிப்பை பார்வையிட்டார். ஒரு சில காட்சிகளுக்கு விஜய் சேதுபதியும் உதவி செய்தார் நாங்கள் நினைத்தது போலவே இந்தக் கதை அமைந்துள்ளது,” என்றார்.
‘குட்டி ஸ்டோரி’ பிப்ரவரி 12ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
Tags: vijay sethupathi, gautham menon, al vijay, nalan kumarasamy, venkat prabhu