கொட்டுக்காளி - மக்கள் மனதில் இடம் பிடிக்கும் - சூரி

09 Aug 2024

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் தயாரிக்க, விஎஸ் வினோத்ராஜ் இயக்கத்தில், சூரி, அன்னா பொன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கொட்டுக்காளி’.

பல சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்ற படம் ஆகஸ்ட் 23ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

படம் பற்றிய தனது அனுபவங்களை பத்திரிகையாளர்களிடம் நடிகர் சூரி பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், 

“விடுதலை, கருடன்’ படங்கள் ஒரு நடிகராக எனக்கு எப்படி பெயர் வாங்கிக் கொடுத்ததோ அதை விட பெரிய பெயரை ‘கொட்டுக்காளி’ பெற்றுத் தரும். அப்படிப்பட்ட கதைக்களம் கொண்ட படம் இது. 

கதைக்களம் மிகவும் புதிதாக இருப்பதோடு, இப்படி ஒரு படம் நம்ம மக்களுக்கு தேவை, அனைவருக்கும் முக்கியமான படமாகவும் இருக்கும்.

‘விடுதலை, கருடன்’ படங்கள் வசூலித்தது போல் இந்தப் படமும் வசூலிக்குமா என்றால், அவற்றை இப் படத்துடன் ஒப்பிடக்கூடாது, படம் வெளியான பிறகு இதை மக்களும் புரிந்து கொள்வார்கள். இந்தப் படம் வசூல் ரீதியாக எப்படி வருகிறது என்பதை விட மக்கள் மனதில் நிச்சயம்  இடம் பிடிப்பதோடு, தனி வரவேற்பும் பெறும். 

இப்படி ஒரு சம்பவம் அனைத்து இடங்களிலும் நடந்திருக்கும். இதை நாம் பார்த்திருப்போம், அதை கடந்தும் வந்திருப்போம், ஆனால் படமாக இந்த கதைக்களம் இதுவரை வந்ததில்லை, இது வர வேண்டிய ஒரு களம். இதை என்னிடம் இயக்குநர் சொன்னவுடன், இதில் நான் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதோடு, இதில் நடித்ததற்காக பெருமைப்படுகிறேன், இப்படி ஒரு படைப்பு மிக அவசியமானது.

படத்தைப் பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் எனக்கு அதிகாலை 5 மணியளவில் போன் செய்தார், அவர் சொன்ன வார்த்தைகளை நான் இங்கு சொன்னால் அதிகமாக இருக்கும். ஆனால், அவர் சொன்னது “உங்களைப் பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது, ஒரு நடிகராக விடுதலை படத்தை விட இந்த படம் உங்களை மிகப்பெரிய உயரத்திற்கு அழைத்துச் செல்லும்” என்றார். மேலும், பலமுறை படத்தை நான் பார்த்தேன், உங்கள் நடிப்பு மிக சிறப்பாக இருக்கிறது, என்றார்.

அவருடன் அவரது மனைவி, அம்மா ஆகியோரும் படம் பார்த்தார்கள், அவர்களும் என் நடிப்பும், படமும் சிறப்பாக இருப்பதாக சொன்னதாக சொன்னார். இயக்குநர் அமைதியாக இருந்துக்கொண்டு இப்படி ஒரு படம் செய்துவிட்டாரே, என்றும் பாராட்டினார்.

‘விடுதலை’ படம் கூட நான் எதிர்பார்க்காதது தான். காமெடி நடிகராக இருந்து கதையின் நாயகனாகி ’விடுதலை’, ’கருடன்’ போன்ற படங்களில் நடித்துவிட்டு, ’கொட்டுக்காளி’ போன்ற படத்தில் நடித்திருப்பது, அதன் மூலம் சர்வதேச திரைப்பட விழாக்களில் நான் பங்கேற்றிருப்பது எல்லாம் சினிமாவில் நான் நேர்மையாக பயணித்ததால் கிடைத்தது என்று நினைக்கிறேன்.

இது அனைத்தும் எனக்கு புதிய அனுபவமாக இருப்பதோடு, ஒரு நடிகராக பலவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை கொடுக்கிறது,” என்றார்.

Tags: kottukkali, soori

Share via: