‘கொட்டுக்காளி’ கதை கேட்டதுமே நடிக்க சம்மதித்தேன் - அன்னா பென்

09 Aug 2024

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் தயாரிக்க, விஎஸ் வினோத்ராஜ் இயக்கத்தில், சூரி, அன்னா பொன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கொட்டுக்காளி’.

பல சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்ற படம் ஆகஸ்ட் 23ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

‘கும்பளாங்கி நைட்ஸ், ஹெலன்,’ உள்ளிட்ட மலையாளப் படங்களிலும் ‘கல்கி 2898 எடி’ படத்தில் நடித்தவருமான அன்னா பென் இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

படம் பற்றிய தனது அனுபவங்களை பத்திரிகையாளர்களிடம் நடிகை அன்னா பொன் பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், 

“கதை எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது அதனால் தான் நடிக்கக சம்மதித்தேன். இது ரொம்ப புதிய முயற்சியாக இருந்தது. கலாச்சாரம் சம்பந்தமான கதைக்களம் தான், மதுரை, மொழி என்று குறிப்பிட்ட மக்களின் வாழ்வியலை பற்றி படம் பேசினாலும், இந்த கதை சர்வதேச அளவிலானது. அதனால் எந்த மொழியில் எடுத்தாலும் இந்த படம் மக்களை சென்றடையும். 

படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருப்பதோடு, அவர்களுக்கான தனித்துவமும் படத்தில் இருக்கிறது. இயக்குநர் வினோத்ராஜ் என்னிடம் கதை சொல்லும் போதே நான் நிச்சயம் இதில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். 

பொதுவாக நான் கதை கேட்டால் ஒரு நாள் எடுத்துக்கொண்டு தான் என் முடிவை சொல்வேன், ஆனால் இந்த படத்தின் கதையை கேட்கும் போதே ஓகே சொல்லிவிட வேண்டும், என்று முடிவு செய்துவிட்டேன், அந்த அளவுக்கு கதை வித்தியாசமானதாக இருக்கும்.

நான் நடித்திருக்கும் மீனா கதாபாத்திரம் பிடிவாதம் பிடித்த பெண் என்றாலும், அந்தக் கதாபாத்திரத்தை வடிவமைத்த விதம் வித்தியாசமாக இருக்கும். படம் முழுவதும் பேசவில்லை என்றாலும், உடல் மொழி, முகபாவனை, பார்வை ஆகியவற்றின் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்.

இதற்கான உடல்மொழியை எப்படி செய்வது என்பது தான் எனக்கு சவாலாக இருந்தது, ஆனால் என்னை ஈர்த்த விசயமும் அது தான், அதை சரியாக செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

சூரி நடித்த ‘விடுதலை’ பார்த்து மிரண்டேன். ‘கருடன்’ படத்தில்  இன்னமும் கலக்கியிருக்கிறார். இந்த படத்திலும் அவருக்கு வித்தியாசமான வேடம். அவர் கரகர குரலில் படம் முழுக்க பேசியிருக்கிறார். தொண்டை கட்டியது போன்ற அந்த குரலுக்கு ரொம்பவே சிரமப்பட்டார். அந்த குரல் வர வேண்டும் என்பதற்காகவே நிறைய வைத்தியம் பார்த்தார். 

நடிப்பில் ரொம்ப கஷ்டம் காமெடி டிரை பண்ணுவதுதான். சூரி காமெடியில் இருந்து இப்ப இன்னொரு தளத்துக்கும் மாறியிருக்கிறார்.மலையாளத்தில் இப்படி மாறுவார்கள். தமிழிலும் அந்த மாற்றம் நடக்கிறது. மலையாள சினிமாவில் சூரி நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

முதலில் மீனா கேரக்டருக்காக மேக்கப் போட்டு, ஹேர் ஸ்டைல் மாற்றி, மதுரைக்காரப் பெண்ணாக மாற்றினார்கள். அந்த தோற்றத்தைப் பார்த்தவுடன் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. நான் ஆளே மாறியிருந்தேன்.  50 சதவீதம் ஜெயித்த பீலிங். அப்புறம், இயக்குனர் சொன்ன நடிப்பு, சூரி உள்ளிட்ட படக்குழுவினர் கொடுத்த ஒத்துழைப்பு செம.

லைவ் சவுண்டில் படப்பிடிப்பு நடத்தினோம். கொட்டுக்காளிங்கிற தலைப்புக்கு ஏற்ப அடமென்ட் கேர்ள் ஆக நடித்திருக்கிறேன்,” என்றார்.

Tags: kottukkaali, anna ben, soori

Share via: