தமிழ் நடிகைகள் பெரும்பாலும் பிகினி புகைப்படங்களை அணிந்து எந்த ஒரு போட்டோ ஷுட்டையும் நடத்த மாட்டார்கள். நாம், தமிழ் நடிகைகள் என்று சொல்வது தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த நடிகைகள். மும்பையில் இருந்து தமிழ் சினிமாவில் நடிக்க வரும் நடிகைகள்தான் கிளாமர், கவர்ச்சி, பிகினி புகைப்படங்களை அவர்களது சமூக வலைத்தளங்களில் அதிகம் வெளியிடுவார்கள்.

அப்படியிருக்கையில் ‘தும்பா’ படத்தில் அறிமுகமாகி ‘அன்பிற்கினியாள்’ படத்திலும் நடித்துள்ள கீர்த்தி பாண்டியன் நேற்று அவரது சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆச்சரியத்தையும், அதிக அதிர்ச்சியையும் கொடுத்தன. 

புகைப்படங்களை மட்டும் பார்த்தவர்களுக்கு அதற்கான காரணம் தெரியாது. ஆனால், அதனுடன் கீர்த்தி பதிவிட்டுள்ள விளக்கத்தைப் படித்தவர்களுக்குத்தான் அவர் எதற்காக பிகினி போட்டோ ஷுட் நடத்தினார் என்பதற்கான காரணம் புரியும்.

“கீர்த்தி கடலில் விழுந்தால், அவளுக்கு நீச்சல் தெரியவில்லை என்றாலும், அவள் மூழ்கவும் மாட்டாள், இறக்கவும் மாட்டாள், எப்படி ?,” ஏனென்றால் அவள் ‘குச்சி’, அதனால் அவள் மிதப்பாள், உயிரோடு இருப்பாள்.....”.

பள்ளி நாட்களில் எனது தோற்றத்தைப் பற்றிய ஜோக் அது. அப்போது அதைப் பற்றி சேர்ந்து சிரித்து ‘கூல்’ ஆக இருப்பேன், ஆனாலும் அது என்னி மிகவும் பாதித்தது. அப்படி எனது டீன் ஏஜ் வயதில் சில வருடங்கள் போனது, அவை இன்றும் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. அந்த நிஜத்திலிருந்து நான் தப்பிக்க நினைத்தேன், முதல் முறையாக தூங்குவதற்காக அழுதேன்.

அது போலவே, எனது குடும்பத்துடன், உறவினர்களுடன், நண்பர்களுடன், புதிதாக அறிமுகமானவர்களுடன், கடைசியாக எனது வேலையிலும் அது தொடர்ந்தது. இத்தனை வருடங்களில்  நான் அப்படியல்ல, எந்த விதத்திலும் என்னிடம் தவறு இல்லை என்பதை மெதுவாக உணர ஆரம்பித்தேன்.

உடல் எடையை அதிகரிக்க மீண்டும் முயற்சி செய்ய எனக்கு அதிக நேரம் தேவைப்பட்டது. ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உடல் எடையைக் கூட்ட வேண்டும் என்பதற்காக எனது பிட்னஸ் பயணத்தை ஆரம்பித்தேன்.

நமது மனதையும், இதயத்தையும் ஒரு சேர முழுமையாக வைத்து இறங்கினால் மனதளவிலும், உடலளவிலும் எதுவும் கடினமில்லை என்பதை உணர்ந்தேன். 

ஒரு விஷயத்தை நீங்கள் மோசமாக விரும்பினால், உங்களைச் சுற்றியுள்ள அனைத்து சக்திகளும் அதை அடைய உழைக்கும். எது கடினமாகத் தோன்றியதோ, எந்த இடத்தை என்னால் அடைய முடியாது என நினைத்தேனோ, அதை செய்து முடித்தேன்.

ஆறு மாதங்கள் கடுமையான பயிற்சி மற்றும் அதிகப்படியான உணவு உட்கொண்டேன். அதிகாலை 5 மணிக்கு எழுந்து சாப்பிட ஆரம்பித்தேன். அதிகமாக சாப்பிடும் போது வாந்தி எடுக்காமல் இருக்க பிரேக்கிற்காக ஒரு சின்ன வாக்கிங் போவேன். 

ஒவ்வொரு 100 கிராம் எடை கூடினாலும் அது எனக்குப் பெரிய வெற்றி, அந்த மாற்றம் எனக்கு ஒரு பெரிய கொண்டாட்டமாக இருக்கும். இதை நான் எனக்காகவே செய்தேன். அடுத்தவர்கள் மீது சிலர் முன்னிறுத்தும் அவர்களைப் பற்றிய பாதுகாப்பின்மையை திருப்திப்படுத்த அல்ல. 

நான் முன்பு எப்போது என்னை எப்படி நேசித்தேனோ, அது போலவே இப்போதும் நான் என்னை நேசிக்கிறேன். நான் எந்த வடிவத்தில், எந்த அளவில், எந்த கலரில் இருந்தாலும் என்னை எப்போதும் நேசிப்பேன். 

எனது படப்பிடிப்பு, எனது புகைப்படங்கள் குறித்து மிகுந்த சந்தேகத்துடன் இருந்தேன். மக்கள் எப்படி வேண்டுமானாலும் பார்த்து பேசுவார்கள், அதில் கொஞ்சம் கவர்ச்சியை சேர்க்கலாம்,” என நீண்ட பதிவு ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டு தான் பிகினி புகைப்படம் எடுத்துக் கொண்டதன் காரணத்தை விளக்கியுள்ளார்.

கீர்த்தி அடுத்து ‘கண்ணகி’ எனற படத்தில் முதன்மை கதாநாயகியாக நடித்து வருகிறார். அப்படத்திற்காக வெளியான கர்ப்பிணிப் பெண் போஸ்டர் கடந்த இரு தினங்களாக சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.