கண்ணம்மா என்னம்மா - மியூசிக் வீடியோ வெளியீடு

15 Oct 2021

நாய்ஸ் அன்ட் கிரைன்ஸ் வெளியிட்டுள்ள புதிய ஆல்பம் ‘கண்ணம்மா என்னம்மா’.

பிரிட்டோ இயக்கத்தில் தேவ் பிரகாஷ் இசையயில் ரியோ ராஜ், பவித்ரா லட்சுமி நடித்துள்ள இப்பாடலின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சின்னத் திரை பிரபலங்கள், விஜய் டிவி நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நடன இயக்குனர் சாண்டி பாடலை வெளியிட்டார். 

இப்பாடலைப் பாடிய பாடகர் ஷாம் விஷால் பேசுகையில்,

“பிரிட்டோ போன் செய்து ‘கண்ணம்மா....‘ என ஒரு பாடல் இருக்கு பாடுகிறாயா எனக் கேட்டார். நான் கண்ணம்மா என ஆரம்பிக்கிற மாதிரி ஒரு பாடலும் பாடியதில்லை. அதற்காகத்தான் காத்திருந்தேன் அதனால் உடனே ஓகே சொன்னேன். கண்ணம்மா பாடல் எனக்கு மிக முக்கியமான பாடலாக இருக்கும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். 

Noise & Grains சார்பில் கார்த்திக் பேசியதாவது,

எங்களை அணுகும் சுயாதீன கலைஞர்களை வைத்து, பல வருடங்களாகவே பாடல்களை உருவாக்கி வருகிறோம். கொரோனாவிற்கு பிறகு ஒரு மார்க்கெட் ஓபனாகியுள்ளது. அதனை சரியான வகையில் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள். அதைத்தான் தற்போது செய்து வருகிறோம்.  ‘குட்டி பட்டாஸ்’ பாடல் செய்து கொண்டிருந்தபோது, எதேச்சையாக ரியோவை சந்தித்த போது, எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருந்தோம் அப்போது தான் இந்த ஐடியா பற்றி சொன்னார், அது எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனடியாக செய்யலாம் என முடிவு செய்து இந்தப் பாடலை உருவாக்கினோம். 

Noise & Grains சார்பில் மகாவீர் பேசியதாவது,

Noise & Grains மூலம் இந்த முயற்சி பல வருடங்களாக நாங்கள் பேசி வந்ததுதான். இந்த நிறுவனத்தில் அனைத்தையுமே திட்டமிட்டு, பெரிய அளவில் செய்து வருகிறோம். அனிருத் வைத்து ஆரம்பித்ததில் இருந்து, நிகில் அண்ணாவை வைத்து பிரஸ் மீட் வைத்து, அறிமுகப்படுத்தியது வரை எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்து வருகிறோம். சுயாதீன கலைஞர்களை தேர்ந்தெடுத்து, அவர்களை  அனைவரும் கொண்டாடும் வகையில் தர வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். 


இயக்குநர் பிரிட்டோ பேசுகையில்,

ரீகன் தான் இந்தப்பாடல் குறித்து முதலில் சொன்னான். ரியோவிடம் சொன்ன போது அவன் வேண்டாம் என்று தான்  சொன்னான். அதன் பின் பாடல் கேட்ட பிறகு, அவனுக்கு பிடித்து, அதை வீடியோ செய்யலாம் என முடிவு செய்து, சின்னதாக நாங்களே மொட்டை மாடியில் எடுத்தோம். அதை ரியோ அவரது நண்பர்களான அபு மற்றும் சால்ஸ் இருவரிடமும் காட்ட, அவர்களுக்கு இது பிடித்துப் போய் உதவி செய்ய,  இந்தப் பாடல் பெரிய அளவில் உருவானது. ஒளிப்பதிவாளர் S.மணிகண்ட ராஜா உதவியில் இந்தப் பாடலை ஒரே நாளில் உருவாக்கினோம். இந்தப் பாடல், மிகப்பெரிய அளவில் வெளியாவது மிகப்பெரும் மகிழ்ச்சி, அனைவருக்கும் நன்றி. 

நடன அமைப்பாளர் அபு & சால்ஸ் பேசியதாவது,

எனக்கு முதன் முதலில் ஆல்பம்  செய்த போது பயமாக இருந்தது.  இப்போது பயம் போய் விட்டது. பிரிட்டோ மிகப் பெரிய சுதந்திரம் தந்தார். ரியோ, பவித்ரா பெரிய அளவில் ஒத்துழைப்பு தந்தனர். அவர்கள் நிறைய டேக் எடுக்கவில்லை. மிகச் சிறப்பாகச் செய்தார்கள். அவர்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. எங்களையும் உங்களுடன் இணைத்துக் கொள்ளுங்கள் நன்றி. 

நடிகர் ரியோ ராஜ் பேசுகையில்,

என் நட்புக்காக இங்கு வந்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. ஒரே நாளில் இதை பிளான் பண்ணி, பிரிட்டோ மிக அழகாக எடுத்து விட்டார். ஷாம் விஷால் அருமையாகப் பாடியுள்ளார். Noise & Grains மிக  அழகாக வெளியிட்டு விட்டார்கள், அவர்களுக்கு நன்றி. இது அவர்களுக்கு ஆரம்பம் தான், இன்னும் நிறைய செய்வார்கள், எல்லோரும் பாடலைப் பார்த்து ரசியுங்கள் நன்றி. 

பவித்ரா லக்‌ஷ்மி  பேசியதாவது,

ஒரு ஆடியோ லாஞ்ச் என்பது ஒவ்வொரு நடிகருக்கும் கனவு. அது பெரிய படம், பெரிய நடிகர் இருந்தால் தான் நடக்கும் என்றில்லாமல்,  திறமையிருந்தால் அனைவருக்கும் அந்த மேடை கிடைக்கும் என்பதை நிரூபித்த Noise & Grains க்கு நன்றி. இந்த பாடலை ஷாம் விஷால் பாடியிருக்கிறார் என்றவுடனே, நான் ஓகே சொல்லிவிட்டேன். சூப்பர் சிங்கரிலிருந்தே அவருக்கு நான் ரசிகை. பிரிட்டோ இதனை அற்புதமாக இயக்கியிருக்கிறார். எனக்காக இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. 

Tags: rio raj, pavithra lakshmi, britto, noise and grains

Share via: