தீபாவளி வெளியீட்டில் ‘கங்குவா’ உறுதி
25 Jun 2024
சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தினை தீபாவளிக்கு வெளியிடுவது என்று படக்குழு உறுதிச் செய்துள்ளது.
சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘கங்குவா’. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
‘கங்குவா’ படத்தில் வரலாற்றுப் பின்னணி கொண்ட காட்சிகள் தான் அதிகம் என்பதால், அதற்கான கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீண்ட நாட்களாகவே இந்தப் படம் தயாரிப்பிலேயே இருக்கிறது. இதனால் எப்போது வெளியீடு என்பது தெரியாமல் இருந்தது.
சமீபத்தில் சூர்யா ரசிகர்கள் படக்குழுவினரை சமூகவலைதளத்தில் கடுமையாக சாடியிருந்தார்கள். இதனிடையே, ‘கங்குவா’ படத்தினை தீபாவளிக்கு வெளியிடுவது என்பது முடிவாகியுள்ளது. முதலில் ‘விடாமுயற்சி’ வெளியாக இருப்பதால், ‘கங்குவா’ வெளியாகாது என்ற சூழல் நிலவியது. ஆனால், இப்போது தீபாவளி வெளியீட்டை உறுதிச் செய்து விநியோகஸ்தர்களிடம் தெரிவித்துள்ளனர்.
தீபாவளிக்கு ‘விடாமுயற்சி’ வெளியாகும்பட்சத்தில், இரண்டு நாட்களுக்கு முன்பு அல்லது பின்பு ‘கங்குவா’ படத்தினை வெளியிடலாம் என முடிவு செய்திருக்கிறார்கள். பல்வேறு மொழிகளில் வெளியாக இருப்பதால், இதனை விளம்பரப்படுத்த பெரிய திட்டமொன்றை படக்குழுவினர் வைத்திருக்கிறார்கள்.
Tags: kanguva, suriya, diwali release