KBR's SHOW - யு டியூப் சேனல் ஆரம்பித்த பாக்யராஜ்

07 Jan 2021

இந்தியத் திரையுலகின் திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் தயாரிப்பாளர், எழுத்தாளர், இயக்குனர், நடிகர் கே.பாக்யராஜ்.

அவரது இயக்கத்தில், எழுத்தில் வெளிவந்த பல தமிழ்ப் படங்கள் மாபெரும் வெற்றி பெற்றிருக்கின்றன. அவரது பல படங்கள் வேறு பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் பெரிய வெற்றி அடைந்திருக்கின்றன.

1986ம் ஆண்டு ஹிந்தியில் அமிதாப்பச்சன், ஜெயப்பிரதா, ஸ்ரீதேவி நடித்த ‘ஆக்ரி ராஸ்தா’ படத்தை இயக்கினார் பாக்யராஜ். அப்படம் அமிதாப் நடித்த படங்களில் மாபெரும் வெற்றி பெற்ற ஒரு படமாக அமைந்தது.

தற்போது சினிமா பிரபலங்கள் பலரும் யு டியூப் சேனல் ஆரம்பிப்பதுதான் ஒரு பேஷனாக இருக்கிறது. ஏற்கெனவே, பாக்யராஜின் குருநாதர் இயக்குனர் பாரதிராஜா கூட ஒரு யு டியுப் சேனல் ஆரம்பித்து சில வீடியோக்களைப் பதிவிட்டார்.

இன்று தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடிய பாக்யராஜ் ‘KBR's SHOW’ என்ற பெயரில் யு டியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். முதல் வீடியோவாக ‘ஒரு நாயகன் உதயமாகிறான்’ என்ற தலைப்பில் அவரே பேசியுள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஏற்கெனவே ‘பாக்யா’ என்ற வார இதழை பெரும் வரவேற்பு பெறும் அளவில் நடத்திய அனுபவம் உள்ளவர் பாக்யராஜ். இந்த யு டியூப் சேனலில் சினிமா பற்றிய அவருடைய பல்வேறு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார் என எதிர்பார்க்கலாம். சினிமா ரசிகர்களுக்கு அதன் மூலம் பல சுவாரசியத் தகவல்கள் கிடைக்கலாம்.

Tags: k bhagyaraj, bhagyaraj

Share via: