உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் உருவான ‘ஜோதி’
21 Jun 2022
2020 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் 11 மாநிலங்களில் 43 இடங்களில் நடந்த மனதை உலுக்கும் உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து உருவான ‘ஜோதி’ திரைப்படத்தின் முதல் பாடல் "போவதெங்கே" நேற்று SRM கல்லூரியில் ஆயிரம் மாணவ மருத்துவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
தயாரிப்பாளர் ராஜா சேதுபதி, இயக்குனர் கிருஷ்ண பரமாத்மா, நாயகி ஷீலா ராஜ்குமார், இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, ஹரி க்ரிஷ் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் ராஜா சேதுபதி பேசுகையில்,
‘சதுரங்க வேட்டை’ படத்தொகுப்பாளராகிய நான் இந்தப் படத்தை தயாரித்ததற்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கு ஒன்றில் ‘சதுரங்க வேட்டை’ படத்தை மேற்கோள் காட்டி தீர்ப்பு வழங்கப்பட்டதே முக்கியக் காரணம். அதுபோலவே ஜோதி படத்தின் கரு சாமானிய பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மனதை உலுக்கும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு கதை. சமூக அக்கறை உள்ள நல்ல திரைப்படங்களை மக்கள் எப்போதும் கைவிட்டது இல்லை. இதன் கருவும், நடந்த சம்பவமும், இதன் பின்னணியும் என் தூக்கத்தைத் தொலைத்தது. இதனால் ஜோதி திரைப்படத்தை தயாரித்திருக்கிறேன்.
இயக்குனர் கிருஷ்ண பரமாத்மா பேசுகையில்,
சமூக அக்கறை கொண்ட கதைக் கருவை விறுவிறுப்பான திரைக்கதையுடனும், எதார்த்தமான வசனங்களுடனும் எடுக்கப்பட்ட ‘ஜோதி’ திரைப்படம் எமோஷனல் கலந்த கிரைம் திரில்லராக வந்திருக்கிறது. இப்படத்தின் முதல் பாடலாகிய போவதெங்கே பாடலை மருத்துவ மாணவர்கள் முன்னிலையில் வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவரும் குடும்பத்துடன் வந்து திரையில் பார்க்க கேட்டுக்கொள்கிறேன்.
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசுகையில்,
இப்படத்திற்கும் எனக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு, எனது சொந்த வாழ்வின் நிகழ்வை இப்படம் பிரதிபலிப்பதால் அனைத்து பாடல் வரிகளும் மிகவும் ஆழமாகவும், அர்த்தமுள்ளதாகவும் அமைக்க முடிந்தது. படத்தில் அமைக்கப்பட்ட காட்சிகள் என் வரிகளுக்கு உயிரோட்டமாக அமைந்துள்ளது. முதல் பத்து நிமிட காட்சியைக் கண்டு மிரண்டு விட்டேன். இப்படத்தையும், பாடல்களையும் மக்கள் பெரிதும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்.
இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் பேசுகையில்,
அர்ஜுன் ரெட்டி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படங்களைப் போலவே இந்தப் படமும் பெரிய ஹிட்டாகும். இந்த படத்தில் நான்கு பாடல்கள் இருக்கு, ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு டைப்பில் இருக்கும். அதில் முதல் பாடலாக இருக்கும் போவதெங்கே பாடலை கார்த்திக் பாடியிருக்கிறார். இந்த படத்துக்கு பின்னணி இசை அமைக்கும் போது கலைஞர்கள் அனைவரும் அழுதுவிட்டார்கள். அதன் தாக்கம் ரொம்ப நாள் இருந்தது என்று சொன்னார்கள்.
ஹரி க்ரிஷ் பேசுகையில்,
ஜோதி படத்துல முக்கியமான கேரக்டர் ஒன்னு பண்ணியிருக்கேன். அது ரொம்ப நல்ல கேரக்டர். படம் ரிலீஸுக்கு அப்புறம் ரொம்ப பேசப்படும் கேரக்டரா இருக்கும். அது எந்தளவுக்கு நல்ல கேரக்டர்னா, நடிச்சிக்கிட்டு இருக்கும்போது என்னோட கால் ஒடைஞ்சிருச்சி, ஒரு மாசம் ரெஸ்ட் எடுக்கனும்னு டாக்டர் சொல்லிட்டாரு, ஆனா நா ரெஸ்டே எடுக்காம அடுத்த நாளே சூட்டிங்கு வந்துட்டேன். அந்த கேரக்டர் உங்க எல்லாருக்கும் பிடிச்ச கேரக்டராவும் இருக்கும்.
நடிகை ஷீலா ராஜ்குமார் பேசுகையில்,
‘ஜோதி’ படத்தை முழுவதுமாக பார்க்கவில்லை. இப்போதுதான் முதல் முறையாக பத்து நிமிஷம் பார்க்கிறேன். ஸ்கிரிப்ட்டில் என்ன இருந்ததோ அதைவிட விஷுவலாகப் பார்க்கும் போது நன்றாக இருக்கிறது. உடனே, முழு படத்தையும் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. கிருஷ்ண பரமாத்மாக ரொம்ப நன்றாக இயக்கியிருக்கிறார். எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் மிக்க நன்றி.
Tags: jothi, krishna paramathma, sheela rajkumar