திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், ஜென் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், மனோ கார்த்திகேயன் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், சதீஷ்குமார், மிர்ணாளினி ரவி, அனிதா சம்பத், ஹரிஷ் பெராடி, வேலு பிரபாகரன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஜாங்கோ’.

இப்படத்தின் மூலம் மனோ கார்த்திகேயன் இயக்குனராக அறிமுகமாகிறார். தன்னுடைய முதல் படத்தையே ஒரு சயின்ஸ் பிக்ஷன் படமாகக் கொடுத்திருக்கிறார். 

இந்தியத் திரையுலகத்திலேயே முதல் முறையாக ‘டைம் லூப்’ அடிப்படையில் வெளியாகும் முதல் திரைப்படம் ‘ஜாங்கோ’ என்பது குறிப்பிடத்தக்கது. 

‘டைம் லூப்’ என்றால் என்ன ‘ஜாங்கோ’ என்பதன் அர்த்தம் என்ன என மனோ கார்த்திகேயன் கூறியதாவது...

“டைம் லூப்’ என்பது ஒரு விஷயமே திரும்பத் திரும்ப நடப்பது. இப்ப ஒரு பாட்டையே நாம திரும்பத் திரும்ப கேப்போம் இல்லையா அது மாதிரி.

ஒரு நாள் திரும்ப நடந்தா, இல்ல, ஒரு நாளில் ஒரு மணி நேரம் மட்டும் திரும்ப நடந்தா, உதாரணத்துக்கு 12 மணிங்கறது திரும்பத் திரும்ப நடந்தா, இதுதான் டைம் லூப். 

டைம் லூப் அப்படிங்கறது பொதுவான ஒரு கரு. இப்ப, பேய் படம்னு பொதுவா சொல்லலாம், ஒவ்வொருத்தரும் அதை வெவ்வேறு விதமா திரைக்கதைல சொல்வாங்க. அதே மாதிரி ‘டைம் லூப்’ கதைய திரைக்கதைல வெவ்வேறு விதமா எப்படி வேணா சொல்ல முடியும்.

டைம் மிஷின், டைம் டிராவல் இரண்டும் ஒண்ணுதான். ஒரு கதாபாத்திரத்தையோ, ஒருத்தரோட வாழ்க்கையையோ நாம முன்னாடியோ, பின்னாடியோ போய் பார்க்கிற மாதிரி சொல்றது. ‘டைம் லூப்’ தொடர்ந்து ரிபீட், ரிபீட் ஆகி நடக்கறது.

இந்த ‘ஜாங்கோ’ படத்துல கதையோட ஹீரோ ஒரு நாளைக்குள்ள எப்படி வாழறாருங்கறத படத்தோட கதையா பண்ணியிருக்கேன். 

உண்மைத் தன்மை மாறாம ஒரு ‘பிக்ஷன்’ கதையைக் கொடுத்தால் ரசிகர்கள் ஏத்துப்பாங்க. இந்தப் படத்துல உண்மைத் தன்மை மாறாம, நம்பும்படியா கொடுத்திருக்கோம்.

‘ஜாங்கோ’ என்பது துருக்கி வார்த்தை, ‘மீண்டும் எழுவேன்’ என்பதுதான் அர்த்தம். படத்துல மீண்டும் மீண்டும் நடக்கிறதால வச்சோம், கதையில நடக்கிற சம்பவத்துக்கும் அது பொருத்தமா இருக்கும்,” என்றார்.

ஜாங்கோ, வரும் நவம்பர் 19ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.