திருமண வாழ்க்கை முடிவு: ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி கூட்டாக அறிவிப்பு
14 May 2024
தங்களுடைய திருமண வாழ்க்கை முடிவு பெற்றதாக ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி தம்பதியினர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி இருவருமே காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு அன்வி என்ற பெண் குழந்தை உள்ளது. இருவருமே தங்களுடைய தளத்தில் மும்முரமாக பணிபுரிந்து வந்தார்கள். கடந்த 6 மாதமாகவே இருவருக்கும் இடையே மனஸ்தாபங்கள் வந்து கொண்டிருந்தன.
இதனிடையே, விரைவில் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளனர் என்று தகவல் பரவியது. இது குறித்து விசாரித்த போது, இரண்டு தரப்புமே இதனை உறுதிப்படுத்தினார்கள். தற்போது இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவருமே கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“நீண்ட யோசனைக்குப் பிறகு, 11 ஆண்டுக்கால திருமண வாழ்க்கைக்குப் பிறகு நானும் சைந்தவியும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையைப் பேணுவதன் மூலம் எங்களுடைய மன அமைதி மற்றும் முன்னேற்றத்திற்காக இந்த முடிவினை எடுத்துள்ளோம்.
இந்த ஆழமான தனிப்பட்ட மாற்றத்தின் போது எங்கள் தனியுரிமையைப் புரிந்துகொண்டு மதிக்குமாறு ஊடகங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இது ஒருவருக்கொருவர் சிறந்த முடிவு என்று நாங்கள் நம்புகிறோம். இந்த கடினமான நேரத்தில் உங்கள் புரிதல் மற்றும் ஆதரவு எங்களுக்கு தேவை”
இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
Tags: gv prakash, saindhavi