கோட்’ 2-வது பாடல்: யுவன் உருக்கம்

23 Jun 2024

‘கோட்’ படத்தில் பவதாரணியின் குரலை ஏஐ தொழில்நுட்பம் மூலம் உபயோகப்படுத்தியது குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார் யுவன் சங்கர் ராஜா.

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரபுதேவா, சினேகா, பிரசாந்த், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கோட்’. செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, ‘கோட்’ படத்திலிருந்து ’சின்ன சின்ன கண்கள்’ என்ற பாடலை வெளியிட்டது படக்குழு. இந்தப் பாடலை விஜய்யும், மறைந்த பாடகி பவதாரணியும் பாடியுள்ளனர். இதனை பாடும் முன்பே உடல்நிலை சரியில்லாமல் பவதாரணி காலமாகிவிட்டார். ஆனால், ஏஐ தொழில்நுட்பம் மூலம் அவருடைய குரலை பதிவு செய்து, இந்தப் பாடலை உருவாக்கியுள்ளார் யுவன்.

‘சின்ன சின்ன கண்கள்’ பாடல் குறித்து யுவன் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

“’கோட்’ படத்தின் இரண்டாவது பாடல் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பெங்களூரில் இந்தப் பாடலை உருவாக்கிய போது, நானும் வெங்கட்பிரபுவும் இதனை சகோதரி பவதாரணி பாடினால் சரியாக இருக்கும் என நினைத்தோம். அவர் குணமடைந்து வந்தவுடன், அவரை வைத்து இந்தப் பாடலை பதிவு செய்யலாம் என திட்டமிட்டோம்.

ஆனால், ஒரு மணிநேரம் கழித்து அவர் மறைந்த செய்த கிடைத்தது. அவருடைய குரலை இப்படி பயன்படுத்துவேன் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. இந்தப் பாடலில் பங்காற்றிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு விவரிக்க முடியாத தருணம்”

இவ்வாறு யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

Tags: goat, yuvan, venkat prabhu, vijay, bavadharini

Share via: