‘கங்குவா’ தொடங்கப்பட்டதன் பின்னணி: ஞானவேல்ராஜா தகவல்

10 Jul 2024

‘கங்குவா’ தொடங்கப்பட்டதன் பின்னணி குறித்து ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கங்குவா’. ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்தப் படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அளித்துள்ள பேட்டியில் ‘கங்குவா’ படம் எப்படி திட்டமிட்டு தொடங்கப்பட்டது என்பதை பேசியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

”சூர்யா சாரை சந்தித்து இயக்குநர் சிவா சார் 4 கதைக்கான ஐடியாக்களை கூறினார். அதில் ஒன்றை தவிர்த்து மூன்றுமே ஒகே. இதில் எது உங்களுக்கு ரொம்ப பிடித்திருக்கிறதோ அதை பண்ணலாம் என கூறிவிட்டார் சூர்யா சார். பின்பு ஒரு நாள் சிவா சார் எனக்கு போன் செய்தார். என்னிடம் ஒரு ஐடியா இருக்கிறது, அதை சூர்யா சாரிடம் கூறவில்லை. அதை கூறினால் மீதி அனைத்தையும் விட்டுவிட்டு இதையே பண்ணலாம் என்று கூறிவிடுவார் என்றார்.

ஆனால், அது உங்களுக்கு பெரிய பிரச்சினையை உருவாக்கிவிடும் என்றார். ஏன் என்று கேட்டேன். அந்தக் கதைக்கு பட்ஜெட் இவ்வளவு தான் என்று முடிவு செய்துவிட முடியாது. ஏனென்றால் அந்தக் கதை என்ன பட்ஜெட் கேட்கிறதோ, அதை கொடுத்தே ஆகவேண்டும் என்றார். எனக்கு உங்களை சிக்கலாக்க விரும்பவில்லை என்று சிவார் சார் கூறினார். உடனே, அந்தக் கதையின் ஐடியாவை கூறுங்கள் என்றேன். ’கங்குவா’ ஐடியாவை கூறினார். அந்தக் கதையினை நீங்கள் ஒரு பொருட்செலவு என முடிவு செய்து தயாரிக்க முடியாது.

இந்த மாதிரி கதையை தான் இப்போது ரசிகர்கள் பார்ப்பார்கள், நாம் இதையே செய்யலாம் என்று சிவா சாரிடம் கூறினேன். உடனே, 3 நாட்கள் நேரம் எடுத்துக் கொள்ளுங்கள், பின்பு கூறுங்கள். அதற்குப் பிறகு சூர்யா சாரிடம் பேசுகிறேன் என்று சிவா சார் தெரிவித்தார். நானோ இதைதான் பண்றோம் என முடிவு செய்துவிட்டேன்.

உடனே, சூர்யா சார் – சிவா சந்திப்பு நடைபெற்றது. அவருக்கும் கதை பிடித்திருந்தது. ஆனால், என்னை பற்றி யோசிக்க தொடங்கினார். செய்துவிடலாமா என்று கேட்டார், நானோ அண்ணா இதைத் தான் பண்றோம் என தொடங்கிவிட்டோம். ஆனால் திட்டமிட்ட நாட்கள், பட்ஜெட் என அனைத்தையும் தாண்டிவிட்டது ‘கங்குவா’.

அனைவரும் படம் பார்க்கும் போது ரொம்ப கடினமான படமாக தெரியும். ஆனால், சிவா சார் ரொம்ப எளிதாக எடுத்து படமாக்கியுள்ளார்”

இவ்வாறு ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.

Tags: kanguva, sirutha siva

Share via: