விஜய் சேதுபதி நடிக்கும் மௌனப் படம் ‘காந்தி டாக்ஸ்’
18 Jan 2021
தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கும் விஜய் சேதுபதி, தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களிலும் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
அடுத்து ‘காந்தி டாக்ஸ்’ என்ற மௌனப் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை பிரபல மராத்தி இயக்குனர் கிஷோர் பாண்டுரங் பலேகர் இயக்குகிறார்.
கமல்ஹாசன் நடித்து 1987ம் ஆண்டு வெளிவந்த ‘பேசும் படம்’ படத்திற்குப் பிறகு இந்தியத் திரையுலகில் உருவாக உள்ள மௌனப் படம் ‘காந்தி டாக்ஸ்’.
படம் பற்றி இயக்குனர் கிஷோர் கூறுகையில்,
"இந்தப் படம் உணர்ச்சி ரீதியாக என் இதயத்துக்கு நெருக்கமான படம். ஒரு நடிகர் நாம் தரும் உணர்வுகளை அதே உணர்ச்சிகளோடு தன்னை தொடர்புபடுத்திக் கொள்ளும்போது அது இயக்குநருக்குக் கிடைக்கும் வரம். எனக்கு விஜய் சேதுபதி அப்படி ஒரு நடிகர் தான். தனது நடிப்பின் மூலம் சவாலான ஒரு கதைக்கு உரிய நடிப்பைத் தரக் கூடியவர். அவர் இந்தத் திரைக்கதையைப் படித்தவுடனேயே, படம் குறித்த எனது பார்வையை, அணுகுமுறையை முழுவதுமாகப் புரிந்து கொண்டார்.
ஒவ்வொரு இயக்குநரும் தங்கள் நடிகர்களிடமிருந்து குறிப்பிட்ட சில குணாதிசயங்களை எதிர்பார்ப்பார்கள். இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க பாலிவுட்டில் நடிகர்களைத் தேடிக் கொண்டிருந்த அதே நேரத்தில் மற்ற மொழித் திரைத் துறைகளிலும் தேடினேன். அப்போதுதான் விஜய் சேதுபதி பற்றி தெரிய வந்தது.
அவரது நடிப்புத் திறன், ஸ்டைல், குரலில் இருக்கும் ஆற்றல் எல்லாம் வியக்கவைத்தது. அவரைப் பார்த்தவுடன் தான் என் கதையின் நாயகன் கிடைத்து விட்டான் என்பதை உணர்ந்தேன். அவர், அவரது தொழிலில் அற்புதத் திறமையாளர் என்பது மட்டுமல்ல, மிகவும் எளிமையான, பிரச்சாரம் செய்யாத ஒரு நட்சத்திரம்.
தனது படங்களுக்காக எந்தவிதமான எல்லைக்கும் செல்லக் கூடியவர். அவருடன் பணியாற்றுவதில், எனது கனவுப் படத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஆரம்பிப்பதில் உற்சாகமாக இருக்கிறேன்," என்று கூறியுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே சில முன்னணி பாலிவுட் படைப்புகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ‘அந்தாதுன்’ இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் அடுத்த படம், சந்தோஷ் சிவன் இயக்கும் 'மும்பைக்கர்', ஷாஹித் கபூர் நடிப்பில் உருவாகு வெப் சீரிஸ் என வரிசையாக அவர் நடிக்கவுள்ளாராம்.
திவய் தமிஜா க்ரியேட்டிவ் ப்ரொடியூஸராக பணியாற்றும் 'காந்தி டாக்ஸ்’ திரைப்படத்தை மூவி மில் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது. இப்படம் ஹிந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது
Tags: vijay sethupathi, gandhi talks, kishor pandurang belekar