தமிழ் சினிமா பாடல்களைத்தான் ரசிகர்கள் அதிகமாக ரசித்து வந்த நிலையில், தனி ஆல்பம் பாடல்களையும் ரசிகர்கள் ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

பல இசை நிறுவனங்களும் புதிது புதிதாக திறமைசாலிகளை ஊக்குவிக்கும் விதமாக ஆல்பங்களை வெளியிட ஆரம்பித்துள்ளன.

பல வருட பாரம்பரியம் மிக்க இசை நிறுவனமான சரிகம, தனது சரிகம ஒரிஜனல்ஸ் மூலம் முதல் தென்னிந்திய இசை ஆல்படத்தை வெளியிட்டுள்ளது.

‘என்ன வாழ்க்கடா’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்த ஆல்படத்தில் ரக்ஷன், சுனிதா, ஸ்வஸ்திஷ்டா, ஜிபி முத்து ஆகியோர் நடித்துள்ளனர். 

டாங்க்லி இயக்கியுள்ள இப்பாடலுக்கு எஸ்.கணேசன் இசையமைக்க, ஏ.பி.ஏ.ராஜா எழுத, பென்னி தயாள், விருஷா ஆகியோர் பாடியுள்ளனர். இப்பாடலுக்கு அபு மற்றும் சால்ஸ் நடனம் அமைத்துள்ளனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சரிகம மற்றும் நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் இணைந்து வழங்கும் இப்பாடல் நேற்று வெளியானது. இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் துல்கர் சல்மான் ஆகியோர் அவர்களது சமுக வலைதள பக்கங்களில் இப்பாடலை வெளியிட்டனர்.

நேற்று மாலை சென்னையில் நடைபெற்ற இப்பாடல் அறிமுக விழாவில் பல திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

‘என்ன வாழ்க்கடா’ ஆல்படம் குறித்து சரிகமா நிறுவனம் சார்பில் பேசிய பி.ஆர்.விஜயலட்சுமி, 

“சரிகம இந்தியாவின் பழமையான, மிகவும் பெருமை மிக்க நிறுவனம். இந்நிறுவனம் மூலம் தொடர்ந்து புதிய திறமைகளை அறிமுகப்படுத்தி வருகிறோம். புதிதாக ‘சரிகம ஒரிஜனல்ஸ்’ என்ற அமைப்பு மூலம், தற்போது புதிய இசைத் திறமைகளை அறிமுகப்படுத்தி வருகிறோம். முன்பு ஒரு நிகழ்ச்சிக்காக ஏ.ஆர்.ரஹ்மான் பள்ளியில் இருந்து இந்த குழுவை மும்பைக்கு அழைத்துப் போயிருந்தோம். அப்போது இவர்கள் செய்த கலாட்டா மறக்க முடியாதது. இப்போது கணேசன் முதலான அதே குழு,  ‘சரிகம ஒரிஜனல்ஸ்’-ன் முதல் பாடலை உருவாக்கியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது,” என்றார்.