‘சின்ட்ரெல்லா’ ஸ்னீக் பீக்-கை வெளியிட்ட எஸ்ஜே சூர்யா

08 Mar 2021

எஸ்எஸ்ஐ புரொடக்ஷன் தயாரிப்பில், வினு வெங்கடேஷ் இயக்கத்தில், அஷ்வமித்ரா இசையமைப்பில், ராய் லட்சுமி, சாக்ஷி அகர்வால், மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சின்ட்ரெல்லா’.

இப்படத்தின் ‘ஸ்னீக் பீக்’ வீடியோவை இயக்குனரும், நடிகருமான எஸ்ஜே சூர்யா வெளியிட்டார். 

இப்படத்தின் இயக்குனர் வினு, எஸ்ஜே சூர்யாவிடன் உதவியாளராகப் பணியாற்றியவர்.

இன்று வெளியிடப்பட்ட ஸ்னீக் பீக் வீடியோ ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டதாம். 

இது பற்றி இயக்குனர் வினு கூறியதாவது,

"இப்போது சாதாரணமாக எல்லாரும் 'ஸ்னீக் பீக்' வீடியோக்களை வெளியிடுகிறார்கள். நாம் ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று ஒரே ஷாட்டில் எடுக்க முயற்சி செய்தோம். அதில்  வெற்றியும் பெற்றோம். இக்காட்சி அப்படியே படத்தில்  வருகிறது. 

ராய்லட்சுமி ஆடைகளைக் களைந்து விட்டு ஓடுவது போலவும் களையப்பட்ட அந்த ஆடை  அமானுஷ்யமாக எழுந்து அசைந்து  சுழன்று வருவது போலவும் வரும் அந்தக் காட்சி நிச்சயம் ரசிகர்களுக்குப் புதிய சிலிர்ப்பான  அனுபவமாக இருக்கும். 

இதை நாங்கள் ஒரே ஷாட்டில் எடுத்தோம். இந்த முயற்சியை  இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா மிகவும் ரசித்துப் பாராட்டினார். ஸ்னீக் பீக்கைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்தினார்.

இது ஒரு பேய்ப் படம் தான். ஆனால், பேய்ப் படங்களுக்கான வழக்கமான பாணியில் இருந்து விலகி ஒரு விறுவிறுப்பான படமாக உருவாகி இருக்கிறது. ராய் லட்சுமி இப்படத்தில் ஏற்றுள்ள வேடம் அவருக்கு உள்ள  இமேஜை உடைக்கும்படி இருக்கும்.

அவருக்கு இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். அவரை ஒரு கவர்ச்சிப் பதுமையாகப் பார்த்த ரசிகர்களுக்கு தோற்றத்திலும் நடிப்பிலும் மாற்றம் கொண்டதாக இருக்கும். நல்ல நடிப்பில் அவருக்கு உரிய இடத்தை பெற்றுத் தரும் படமாக 'சிண்ட்ரெல்லா' இருக்கும் .

சாக்ஷி அகர்வால்  ஏற்றுள்ள வில்லி பாத்திரம் யாரும் எதிர்பாராத பரபரப்புடன் இருக்கும்," என்கிறார்.

இவர்கள் தவிர ரோபோ சங்கர், 'கல்லூரி' வினோத், பாடகி உஜ்ஜயினி, கஜராஜ் மற்றும் பலர்  நடித்திருக்கிறார்கள். 

'காஞ்சனா 2' படத்திற்கு இசை அமைத்த அஷ்வமித்ரா இசையமைத்திருக்கிறார். தெலுங்கில் 'லட்சுமி என்டிஆர் ' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ராமி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் .

விரைவில் 'சிண்ட்ரெல்லா ' வெளியாக உள்ளது.

Tags: lakshmi rai, cinderella, vinoo venkatesh, sakshi agarwal

Share via: