'பிக் பாஸ் சீசன் 9' நேற்று ஆரம்பம்
06 Oct 2025
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 9’ நேற்று முதல் ஒளிபரப்பு ஆரம்பமானது. 2017ம் ஆண்டு முதல் இந்த நிகழ்ச்சி தமிழிலும் ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதால் அப்போது பெரும் வரவேற்பு இருந்தது. போகப் போக இதற்கான வரவேற்பு குறையத் துவங்கியது.
தொடர்ந்து 7 சீசன்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் கடந்த 8வது சீசனிலிருந்து நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். 9வது சீசனையும் அவரே தொகுத்து வழங்குகிறார். கமல்ஹாசன் அளவுக்கு இல்லையென்றாலும் விஜய் சேதுபதின் தொகுப்பை கடந்த சீசனில் ரசிகர்கள் வரவேற்றார்கள். இந்த சீசனில் இன்னும் மேம்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
9வது சீசனுக்கான போட்டியாளர்களும் வழக்கம் போலவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். விஜய் டிவி நிகழ்ச்சி, சீரியல்களில் பங்கேற்றவர்கள், தொகுப்பாளர்கள், சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியவர்கள், சினிமா இயக்குனர், திருநங்கை, பாடகர்கள் உள்ளிட்ட என 20 போட்டியாளர்கள் நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்கள்.
ஆதிரை, அப்சரா, அரோரா, திவாகர், எப்ஜே, கமருதின், கலையசரன், கனி, கெமி, நந்தினி, பார்வதி, பிரவீண் ஜி, பிரவீண் ஆர், ரம்யா, சபரிநாதன், சுபிக்ஷா, துஷார், விக்ரம், வினோத், வியானா ஆகியோர் அந்த 20 போட்டியாளர்கள்.
நேற்று ஆரம்பமான பிக் பாஸ் சீசன் 9, ஜனவரி முதல் வாரம் வரை நடைபெறும் எனத் தெரிகிறது.
Tags: bigg boss season 9, bigg boss 9, vijay sethupathi, vijay tv
