நான் ரசித்த பாரதிராஜா...

10 Jun 2026

காலையிலேயே எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஜெயா பிளஸ் டிவி நேரலையில் பங்கேற்கச் சென்றுவிட்டதால் எழுத முடியவில்லை. வழக்கமான வேலைகள் மதியத்தைக் கடத்திவிட, இந்த மாலையில் என் மனதில் உள்ளதை பதிவு செய்கிறேன்.

தமிழ் சினிமாவை யதார்த்த பாணியிலான சினிமாவை நோக்கி முன்னெடுத்த பாரதிராஜா இன்று நம்மை விட்டுப் பிரிந்தார்.

தமிழ் சினிமாவின் ரசிகர்களுக்கு இது ஒரு பேரிழப்பு.

1978ல் ‘16 வயதினிலே’ படம் மாறுபட்ட படத்தை மட்டும் கொடுக்கவில்லை. கமல்ஹாசன், ரஜினிகாந்த், கவுண்டமணி என அடுத்த 50, 60 வருடங்களுக்கான நடிகர்களையும், ஸ்ரீதேவி என்ற இந்திய கனவுக் கன்னியையும் கொடுத்தது.

‘செந்தூரப்பூவே, சில்லென்ற காற்றே’ என தமிழ் சினிமா இயற்கையின் பக்கம் போகக் காரணமாக இருந்தவர் பாரதிராஜா.

எனக்கு நினைவு தெரிந்து நான் ரசித்த அவரது முதல் படம் ‘அலைகள் ஓய்வதில்லை’. அந்தப் படம் வெளியான  1981ல் நான் காஞ்சிபுரத்தில் 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் தியேட்டர்கள் பக்கம் போக அவ்வளவு அனுமதி கிடையாது. டிவி யில்தான் பார்த்த ஞாபகம். ‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடலில் மரத்தின் மீது கார்த்திக்கின் கைகளும், ராதாவின் கைகளும் ஒன்று சேர, அதற்கு இளையராஜாவின் மிருதங்க இசையும் பொருத்தமாகிப் போக எனக்குள் எழுந்தது சினிமா தாகம்.

அது அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது.

அந்த 1981ம் ஆண்டு என்றுதான் நினைக்கிறேன். காஞ்சிபுரத்தில் எங்கள் வீட்டருகில் உள்ள ஒரு பங்களாவில் ‘காதல் ஓவியம்’ படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது என்று தகவல் வந்தது. பள்ளி முடித்து வீட்டிற்கு வந்து பையை தூக்கிப் போட்டுவிட்டு, ஓடிப் போய் அந்த வீட்டின் காம்பவுண்டு சுவர் மீது ஏறி, படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தோம். அழகு சிலையாக அங்கு அமர்ந்திருந்தார் ராதா. மஞ்சள் தாவணி என்று ஞாபகம். (டிஸ்கி - இதை மட்டும் நன்றாக ஞாபகம் வைத்திருக்கிறீர்களா...எனக் கேட்க வேண்டாம்). அந்தக் காலத்தில் என்னைக் கவர்ந்த நடிகை ராதா.

இயக்குனர் பாரதிராஜா, நாயகன் கண்ணன் என சிலரை தூர நின்று எட்டிப் பார்த்துவிட்டு வந்தோம். அதே பாரதிராஜாவை பிற்காலத்தில் நான் பேட்டி எடுப்பேன் என்று கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. பேட்டி மட்டுமே 25 வருடங்களுக்கு முன்பாக ஒரு நிகழ்வின் தனிப்பட்ட இரவு நேர விருந்தில் அவருடன் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதைய மற்ற டிவி சேனல் நண்பர்கள் சிலர், நடிகர் சத்யராஜ் அவர்கள், இன்னும் சில சினிமா பிரபலங்கள் என பேசும் அரிய வாய்ப்பு. பெரும் சினிமா ‘போதையில்’ பாரதிராஜா அவர்களை வாய் வலிக்க வலிக்க புகழ்ந்து தள்ளினேன். இன்றும் அது ஞாபகத்திற்கு வந்துவிட்டுப் போகிறது. அப்படி போன்ற சினிமா பிதாமகர்களுடன் பழகிய சிறு வாய்ப்பு கிடைத்தது பாக்கியம்தான்.

பள்ளி படித்த காலத்தில் பார்த்த முதல் படப்பிடிப்பு ‘காதல் ஓவியம்’ என்பதால் இன்று வரையிலும் அப்படம் மீது தனி ஈர்ப்பு. அதற்குக் காரணம் இளையராஜாவின் அற்புதமான பாடல்கள். இப்போதும் அப்பாடல்களைக் கேட்டால் புல்லரிக்கும்.

கல்லூரியில் படித்த காலத்தில் மிகவும் கவர்ந்த படம் ‘என் உயிர் தோழன்’. 1990ல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்த போது வந்த படம். முதன் முதலில் கல்லூரியை கட் அடித்துவிட்டு, படம் வந்த அன்றை முதல் நாள் முதல் காட்சி பார்த்த முதல் படம். அதனால், அந்தப் படமும் நினைவுகளில் நீங்காத இடத்தைப் பிடிக்கும்.

பாரதிராஜாவின் படங்களில் அதிக முறை பார்த்து ரசித்த படம் என்றால் ‘முதல் மரியாதை’. ஒரு ‘கள்ளக் காதலை’க் கூட கண்ணியமான காதலாக ஒருவரால் காட்ட முடியும் என்று வியக்க வைத்திருப்பார். கொஞ்சம் தடம் மாறியிருந்தாலும் தடுமாறி இருந்திருக்கும். அந்தப் படத்தை இன்று வரை வியக்க வைத்திருக்கிறார் என்றால் என்ன சொல்வது. நமக்கு ஒரு கோணத்தில் தெரிந்த நடிகர் திலகம் சிவாஜியை, வேறு ஒரு கோணத்தில் யோசித்து காட்டி, அதில் வெற்றியும் பெற்றவர்.

‘முதல் மரியாதை’ போல மீண்டும் மீண்டும் பார்க்க வைத்த மற்றொரு படம் ‘வேதம் புதிது’. வில்லனாக நடித்து வந்த சத்யராஜை, ‘கடலோரக் கவிதைகள்’ படம் மூலம் ரவுடி காதலனாகக் காட்டியவர். அடுத்த வருடத்திலேயே அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார் என்றால் அது அவரால் மட்டுமே முடிந்த ஒன்று. அமலா அறிமுகமாகும் வரை ராதா ரசிகனாக இருந்த நான் அமலா ரசிகனாக முற்றிலும் மாற ‘வேதம் புதிது’ படமும் ஒரு காரணம்.

அவரது படங்களில் ஓரிரு படங்களை மட்டும் பார்க்கவில்லை. ஒருவேளை பார்த்து மறந்து போயிருக்கலாம். அவற்றை விரைவில் பார்த்துவிட வேண்டும்.

தமிழ் சினிமாவுக்கு, தெலுங்கு சினிமாவுக்கு என நடிகர்கள், நடிகைகள் என பலரை அறிமுகப்படுத்தியவர். பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து - கங்கை அமரன் என அந்தக் கூட்டணியின் பொற்காலம் தொடர்ந்து வாய்க்காமல் போய்விட்டது காலம் செய்த கொடுமை.

ஒவ்வொரு படத்தைப் பற்றியும் தனித் தனியாக எழுத ஆசை தான்...ஆனால், அவ்வளவு பொறுமையாக படிப்பார்களா என்ற சந்தேகத்தால் நான் ரசித்த சிலவற்றை மட்டும் பதிவு செய்துள்ளேன்.

அவர் உயிர் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்தாலும், அவரது உயிரான திரைப்படங்கள் இந்த உலகத்தை விட்டுப் பிரியாது.

- வெற்றிவேல்

Tags: bharathiraja, barathiraja, பாரதிராஜா

Share via: