அனைவரும் பேசுவது சந்தோஷமே: ‘அனிமல்’ தயாரிப்பாளர் கிண்டல்

16 May 2024

‘அனிமல்’ படத்தைப் பற்றி அனைவரும் பேசுவது சந்தோஷமே என்று கிண்டலாக தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் பூஷன் குமார்.

சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் உள்ளிட்ட பல நடிப்பில் வெளியான படம் ‘அனிமல்’. மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் சுமார் 900 கோடி ரூபாய் வசூலும் செய்தது. அதே வேளையில் இந்தப் படத்தின் காட்சியமைப்புகள் குறித்து பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

விமர்சகர்கள் மட்டுமன்றி பல்வேறு முன்னணி திரையுலகினரும் ‘அனிமல்’ படம் கூறித்து தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். இதில் சிலவற்றுக்கு மட்டும் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்க கடும் எதிர்வினை ஆற்றினார்.

இதனிடையே தயாரிப்பாளர் பூஷன் குமார் அளித்துள்ள பேட்டியில், அனைவரும் ‘அனிமல்’ பற்றி பேசுவது சந்தோஷமே என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

“’அனிமல்’ படம் பற்றி இப்போதும் பலரும் பேசுவது சந்தோஷமாக இருக்கிறது. ஏனென்றால் இவர்கள் பேசியவுடன் ஓடிடி தளத்தில் பலராலும் பார்க்கப்பட்டும் இந்தியளவில் முதல் 10 இடத்தில் ஒன்றாக ‘அனிமல்’ படம் வருகிறது. அந்தப் படம் வெளியாகி அனைவராலும் பார்க்கப்பட்டும் 900 கோடி ரூபாய் வசூல் செய்துவிட்டது.

தினமும் யாரேனும் ஒருவர் ‘அனிமல்’ பற்றி பேசிவருகிறார்கள். அவர்கள் கூறும் கருத்துகள் மற்றும் காமெடி அனைத்துமே இயக்குநருக்கு ஒருவித கோபத்தை உருவாக்குகிறது. அதனால் சிலவற்றுக்கு அவர் எதிர்கருத்து தெரிவித்துவிடுகிறார். நானே அவரிடம் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாதீர்கள். அவர்கள் நமக்கும் நன்மையைத் தான் செய்கிறார்கள் என்று கூறிவருகிறேன்.

‘அனிமல்’ படத்தினைப் பார்த்த அனைவரும் ‘அனிமல் பார்க்’ படத்திற்காக காத்திருக்கிறார்கள். ஆகவே ‘அனிமல்’ பற்றி பேசுபவர்கள் பேசட்டும், அவை எங்களை பாதிக்கப்போவதில்லை”

இவ்வாறு புஷன் குமார் தெரிவித்துள்ளார்.

Tags: animal, sandeep reddy vanga, rabir kapoor

Share via:

Movies Released On January 14