அங்காடித் தெரு - 10 ஆண்டுகள்....
26 Mar 2020
வசந்தபாலன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார், விஜய் ஆண்டனி இசையமைப்பில், மகேஷ், அஞ்சலி மற்றும் பலர் நடித்து 26 மார்ச் 2010ம் தேதியன்று வெளியான படம் அங்காடித் தெரு.
இன்றுடன் அப்படம் வெளிவந்து 10 ஆண்டுகள் நிறைவுறுகிறது. படம் பற்றி இயக்குனர் வசந்தபாலன் அவருடைய அனுபவத்தை இன்று முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.
“கொரோனோ ஏற்படுத்திய மாபெரும் இருளில் சிறிய வெளிச்சமாக இந்த நாள் எனக்கு இருக்கிறது.
அன்றைக்கும் இன்றைக்கும் அங்காடித்தெரு என் வாழ்வின் பெரிய வெளிச்சம்.யானை வாழுற காட்டுல தான் எறும்பும் வாழுதுங்கிற வசனம் இன்றும் என் காதுகளில் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் வாழ்ந்திடமுடியும் என்கிற தேவ ஒளியைத் தருகிற வசனம். இன்றைய நாளுக்கும் அத்தனை அழகாய் பொருந்தும்.
டிஜிட்டல் காமெரா முறையாகப் புழக்கத்தில் வராத அந்த காலகட்டத்தில் ரங்கநாதன் தெருவில் மறைவாக காட்சியை எடுக்க எத்தனை சிரமங்களை சந்தித்தோம். இந்த திரைப்படத்தின் கதை எழுதுவதில் துவங்கி தயாரிப்பாளர்கள் தேடுதல்,கதாநாயகன் தேடுதல்,ரங்கநாதன் தெருவில் படப்பிடிப்பு நடத்துவது என்று பெரும் உடல் உழைப்பைக் கோரிய திரைப்படம்.இந்த திரைப்படத்தில் என்னுடன் பணி புரிந்த பெரிய தொழில் நுட்ப கலைஞர்கள் முதல் சிறிய பணியாளர்கள் வரை ஒவ்வொருவரும் மிக முக்கியமானவர்கள்.அவர்கள் தங்கள் ஆன்மாவின் உழைப்பை இதற்காக வழங்கினார்கள். அவர்கள் அனைவரையும் இந்த நேரத்தில் எண்ணிப் பார்த்து நன்றி கூறுகிறேன்.
அங்காடித் தெரு கதையைக் குறைந்தது பத்து தயாரிப்பாளர்களிடம் கூறினேன்.ஆனால் வாய்ப்பு கை நழுவியது.இறுதியாக ஒரு ஒளியைப்போல எனக்கு கிடைத்தார்கள் தயாரிப்பாளர்களான கருணாமூர்த்தி அவர்களும் & அருண்பாண்டியன் அவர்களும். இருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
சில நெருக்கடிகளால் அங்காடித்தெரு திரைப்படம் முழுவடிவம் எடுக்க தாமதமானது.கடைசியில் அங்காடித்தெருயை வெள்ளித்திரையில் வெளியிட முடியாத நெருக்கடி & தாமதம் இன்று போல. தாமதம் என்னை இடையறாது துரத்துகிறது. நான் எத்தனை வேகமாக ஓடினாலும் தாமதம் என்னை விட வேகமாக ஓடுகிறது. படத்தைத் திரையுலகின் முக்கிய தயாரிப்பாளர்கள் பார்த்தார்கள். பல காட்சிகள் ஓடின. ஆனால் எங்கிருந்தும் நம்பிக்கை க்கீற்று கிடைக்கவில்லை.
கடைசியில் படத்தை நேரடியாக நாமே வெளியிட்டு விடலாம் என்று கருணா சாரும் அருண் சாரும் முடிவெடுத்தார்கள். ஆனால் படத்தை வெளியிட நல்ல தேதி கிடைக்கவில்லை. ஏப்ரல் மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை அப்போது வெளியிடலாம் என்று எண்ணினோம். ஆனால் அப்போது பெரிய நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்கள் வருவதால் மார்ச் 26 தேதி தான் இருக்கிறது. இல்லையெனில் ஜீன் மாதம் மட்டுமே தேதி இருக்கிறது இடைப்பட்ட காலத்தில் நல்ல தேதி இல்லை என்றனர்.என்ன செய்வது என்ற தெரியாமல் தயாரிப்பாளர்கள் தவித்தார்கள்.
4 வருடங்கள் கழித்து இந்த திரைப்படம் வெளியாகிறது தவறான தேதியில் வெளியாகி வெற்றி பாதிக்கப்படுமாயின் எனக்கு அது எதிர்மறைவான விளைவுகளை ஏற்படுத்தும். இப்படிப் பல நெருக்கடிகள்.வேறு வழியில்லை. ஆனாலும் கருணா சாரும் அருண் சாரும் என் படத்தின் மீது வைத்த நம்பிக்கை காரணமாகத் துணிந்து தேர்வுகள் நடக்கும் மார்ச் 26ம் தேதி அங்காடித்தெரு திரைப்படம் வெளியாகும் என்று முடிவெடுத்து வெளியிட்டார்கள்.
பத்திரிகைகளின் பெரும் ஆதரவாலும்,தன்னெழுச்சியான மக்களின் ஆதரவாலும் படம் வெளியாகி வெற்றிகரமாக 100 நாட்கள் ஓடி தயாரிப்பாளர்களுக்கு வெற்றியையும் எனக்கு மரியாதையையும் பெற்றுத் தந்தது.
தெலுங்கில் ஷாப்பிங் மால் என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்றது.அஞ்சலிக்குத் தெலுங்கில் ஒரு பெரிய மார்க்கெட் உருவானது. இந்தியன் பனோரமா,பிலிம்பேர்,விஜய் தொலைக்காட்சி விருதுகள், தமிழக அரசு விருது (இந்த விருது இன்னும் கைக்கு வரவில்லை) பாண்டிச்சேரி அரசு விருது,விகடன் விருது இப்படி விருதுகள் மகிழ்ச்சியைத் தந்தன.
ஆனால் நானே தாண்டமுடியாத உயரமான சுவராக ஆகிவிட்டது.அதைத்தாண்டும் நாள் வெகுதூரத்தில் இல்லை.என் அடுத்த திரைப்படம் ஜெயில் அங்காடித்தெருக்கு இணையாக இருக்கும் என்று நம்புகிறேன்,” என்று தெரிவித்திருக்கிறார்.
வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடித்துள்ள ‘ஜெயில்’ படம் விரைவில் வெளிவர இருக்கிறது.
Tags: angadi theru, vasantabalan, mahesh, anjali