’புஷ்பா 2’ வெளியீட்டில் மாற்றமில்லை: அல்லு அர்ஜுன்

22 Aug 2024

‘புஷ்பா 2’ வெளியீட்டில் மாற்றமில்லை என்பதை அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் சுகுமார் கூட்டாக அறிவித்திருக்கிறார்கள்.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘புஷ்பா 2’. முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியால், 2-ம் பாகத்துக்கு உலகளவில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் முதலில் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியீடாக இருந்தது.

ஆனால், பணிகள் முடிவடையாத காரணத்தினால் டிசம்பர் 6-ம் தேதி வெளியீட்டிற்கு மாற்றப்பட்டது. இதிலேயே பல கோடிகளை நஷ்டத்தினை சந்தித்தது படக்குழு. மேலும், அல்லு அர்ஜுன் – சுகுமார் இருவருக்கும் இடையே மோதல் உருவானது. இதனை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

ராவ் ரமேஷ் நடித்துள்ள ‘மாருதி நகர் சுப்பிரமணியம்’ படவிழாவில் அல்லு அர்ஜுன் மற்றும் சுகுமார் இருவருமே கூட்டாக கலந்துக் கொண்டார்கள். இந்த விழாவில் இருவருமே ”‘புஷ்பா 2’ கண்டிப்பாக டிசம்பர் 6-ம் தேதி வெளியாகும். சில காட்சிகளுக்கு அதிக உழைப்பு தேவைப்படுவதால் மட்டுமே தாமதம். கண்டிப்பாக ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்” என்று தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பின் மூலம் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், டிசம்பர் 6-ம் தேதி வெளியாகாது என்ற வதந்திக்கும் இதன் மூலம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள்.

Share via: