அல்லு அர்ஜுனுக்கு நாயகியாக சமந்தா?
02 Apr 2024
அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ள புதிய படத்தில் சமந்தா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் படம் ‘புஷ்பா 2’. இந்தப் படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் விளம்பரப்படுத்தும் பணிகள் அல்லு அர்ஜுனின் பிறந்த நாளான ஏப்ரல் 8-ம் தேதி முதல் தொடங்குகிறது. அன்றைய தினத்தில் டீஸர் வெளியீடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்திற்குப் பிறகு அட்லீ இயக்கவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் அல்லு அர்ஜுன். இதனை அல்லு அரவிந்த் மற்றும் சன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளன. இதன் கதை விவாதப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
’ஜவான்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, அட்லீ இயக்கவுள்ள படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இதில் த்ரிஷா நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால், இதில் சமந்தாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஒப்பந்தமாக இன்னும் கையெழுத்தாகவில்லை. அட்லீ – சமந்தா இருவருமே ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ ஆகிய படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளனர். மேலும், அல்லு அர்ஜுன் படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார் சமந்தா.
இதனால் அட்லீ – அல்லு அர்ஜுன் – சமந்தா கூட்டணி உறுதியாகிவிடும் எனத் தெரிகிறது. ஆனால், படத்தில் 2 கதாநாயகிகள் இருப்பதால், மற்றொரு நாயகி யார் என்பது விரைவில் தெரியவரும். இந்தப் படம் தொடர்பான அறிவிப்பும் ஏப்ரல் 8-ம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது.
Tags: allu arjun, atlee, samantha, anirudh