சாமி இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், உருவாகியுள்ள படம் ‘அக்கா குருவி’. உலகப் புகழ் பெற்ற படமான ‘சில்ட்ரன் ஆப் ஹெவன்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் இந்தப் படம்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பார்த்திபன், அமீர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் சாமி பேசியபோது,

“இந்த படத்தை நான் இயக்கியதற்கு ஒரு காரணம் உள்ளது. நான் பொறியாளன் என்றாலும் இலக்கியம் பயின்றேன். பார்த்திபன் சார், சேரன் சார் இவர்களிடம் பணியாற்றும்போது. நான் சத்ய ஜித் ரே போன்று படம் இயக்கத்தான் வந்தேன். அதற்காக பாரதியாரின் புத்தகங்கள் 20 படித்தபின் எனது ஸ்கிரிப்ட்டை எழுதினேன். அதன்பின் ‘உயிர்’ என்ற படத்தை பாசிட்டிவாக தான் எழுதி  கதை சொல்லப் போனேன். சென்ற அனைத்து இடத்திலும் நிராகரித்துக் கொண்டே இருந்தார்கள். அப்போது, என்னுடன் உதவியாளராக இருந்த ஒருவர் “சார் ஸ்கிரிப்ட்டை நெகட்டிவாக மாற்றலாம்” என்று கூறினார்.

நானும் சரி என்று அண்ணி கதாபாத்திரத்தை நெகட்டிவாக மாற்றிய பின் ஐந்து தயாரிப்பாளர்கள் படத்தை எடுக்க முன் வந்தனர். அதன் பின்னரே உயிர் வந்தது. உயிர் படத்தைப் போல் அடுத்த படத்தை எடுக்க வேண்டாம் என முடிவு செய்து ‘சதம்’ என தந்தை, மகனை பற்றிய ஒரு கதை. ஆனால், அது தொடரவில்லை. அதன் பின்னரே ‘மிருகம்’ படத்தை இயக்கினேன். அதாவது கதையை தேர்ந்தெடுக்கும் சூழலில் நான் இல்லை. அமீர் சார், பார்த்திபன் சார் அவர்கள் எல்லாம் அவர்களுக்கான கதையை தேர்ந்தெடுக்கும் இடத்தில் உள்ளார்கள். 

நேற்று பார்த்திபன் சாரின் “இரவின் நிழல்” படத்தை பார்த்தேன். அப்போது என்னிடம் 75 ஸ்கிரிப்ட் உள்ளது என்றார். நான் என்னிடம் 150 கதைகள் உள்ளது. என் அலமாரி முழுவதும் கதை தான் இருக்கிறது என்றேன். ஒவ்வொரு தயாரிப்பாளரிடமும் நான் நான்கு அல்லது ஐந்து கதைகளை கூறுகிறேன். அவர்கள் தான் கதையை தேர்ந்தெடுக்கிறார்கள், நான் இல்லை. அதனால் தான் ‘மிருகம்’ இயக்கும் சூழல் உருவானது.

அதற்கு பின் ‘சரித்திரம்’ என்ற ஒரு ஆவணப்படம் இயக்கினேன். அது சிலம்பத்தை பற்றிய ஒரு ஆவணப்படம். மினி பாகுபலி போன்ற ஒரு படைப்பு அது. அதை ஒரு 11 ரீல்ஸ் எடுத்தோம். அதற்காக நிறைய படிக்க வேண்டியிருந்தது. பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டு இரண்டு வருடம் கழித்து எடுத்த படம். அதுவும் சரியாக வரவில்லை. 

அதன்பின், வயிற்று பிழைப்பிற்காக ‘சிந்து சமவெளி’ படத்தை இயக்கினேன். அது பிழைப்பையே கெடுத்துவிட்டது. அடுத்தது ‘கங்காரு’ படம் இயக்கினேன். என் பசங்களுக்கு நான் எப்போதும் படங்கள் போட்டு காட்டுவது உண்டு. அப்போது என் மகள் கேட்டால், அப்பா நீங்கள் எப்போதும் அனிமேஷன் படத்தை தான் காட்டுகிறீர்கள். சின்ன குழந்தைகள் நடித்த படங்கள் ஏதும் இல்லையா என்று கேட்டாள். நானும் ஏன் இல்லை என்று "CHILDREN OF HEAVEN" படத்தை போட்டு காண்பித்தேன். அப்போது என் அக்காவும் வீட்டிற்கு வந்திருந்தார். அவர் மொழி புரியாவிட்டாலும் கூட படத்தை பார்த்து அழுது விட்டார். அவர் தான் "இது போன்ற படங்களை யாரும் இயக்க மாட்டார்களா'’ என்று கேட்டார். நானும் சரி நான் எடுத்து விடுகிறேன் என்று மஜித் மஜிதி அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி ஆரம்பிக்கப்பட்ட படம் இது.

அதற்கு முக்கிய காரணம் என் தயாரிப்பாளர்கள் தான். எட்டு தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. ஷூவை ஹீரோவாக கொண்ட ஒரு கதையை இயக்க உதவியதற்கு மிக்க நன்றி.

நான் சிந்து சமவெளி படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நீங்கள் இந்த படத்தை ஓட வைத்தால் நான் இது போன்ற படங்களை மட்டும் தான் இயக்குவேன். இல்லையென்றால், என்னுடைய போக்கை மாற்றிக் கொண்டு வேறு விதமான படைப்பை கொடுப்பேன் என்று கூறினேன். நீங்கள் அந்த படத்தை ஓட வைக்கவில்லை. அதனால் நான் இந்த படத்திற்கு மாறி விட்டேன். நீங்கள் "அக்கா குருவி" படத்தை ஓட வைக்கவில்லை என்றால் நான் மீண்டும் உயிர், மிருகம் போன்று மூன்று அல்லது நான்கு மடங்கு சர்ச்சை படத்தை தான் இயக்குவேன். அது எனக்கு கவலை இல்லை உங்களுக்கு தான் கஷ்டம்.

நான் நல்ல படங்கள் இயக்க வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், நான் என்ன மாதிரியான படத்தை இயக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்யுங்கள். படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. இளையராஜா சார், ஓரிஜினலை விட நீ எடுத்த படம் படம் சிறப்பாக இருக்கிறது என்றார்.

‘அக்கா குருவி’ படம் மே 6ம் தேதி வெளியாகிறது.