ஜீ தமிழ் - ‘சர்வைவர்’ ரியாலிட்டி ஷோ மூலம் டிவிக்கு வரும் நடிகர் அர்ஜுன்

முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜீ தமிழ் டிவி  ‘சர்வைவர்’ என்ற புதிய ரியாலிட்டி ஷோ ஒன்றை விரைவில் ஆரம்பிக்க உள்ளது.

ஒரு தனித் தீவில் போட்டியாளர்கள் 90 நாட்கள் தங்க வைக்கப்படுவார்கள். அவர்களுக்கு இடையிலான துணிச்சலான பயணம்தான் ‘சர்வைவர்’ நிகழ்ச்சியின் கரு. 

சர்வதேச அளவில் புகழ் பெற்ற, இப்படிப்பட்ட ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு  பொருத்தமான ஒரு தொகுப்பாளர் அவசியம். அப்படியான ஒரு தொகுப்பாளராக, தமிழ் சினிமா உலகில் தனது அதிரடி ஆக்ஷன் மூலம் புகழ் பெற்ற நடிகர் அர்ஜுன் இருக்கப் போகிறார். 

தயாரிப்பு, நடிப்பு, இயக்கம் என சினிமாவில் பல திறமைகளை நிரூபித்த நடிகர் அர்ஜுன் இந்த ‘சர்வைவர்’ நிகழ்ச்சி மூலம் டிவியில் அடியெடுத்து வைக்கிறார். 

நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பயணம் முழுவதிலும் ஒரு குருவாகவும், வழிகாட்டியாகவும் அவர் செயல்பட உள்ளார்.

சர்வைவர் நிகழ்ச்சியின் மூலம் டிவியில் நுழைய உள்ள அர்ஜுன் நிகழ்ச்சி பற்றி பேசுகையில்,

“சர்வதேச அளவில் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவான இந்த ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். உலகம் முழுவதும் பிரபலமான ரியாலிட்டி ஷோவான சர்வைவரில் நான் ஒரு முக்கிய பங்கு வகிப்பது என்பது, இதுவரை நான் கண்டிராத ஒரு புதுமையான  அனுபவமாகவே இருக்கும். 

நிகழ்ச்சியின் இந்த மூன்று மாத பயணத்தில், ஒரு தனித் தீவில் போட்டியாளர்கள் தங்கள் அச்சத்தினை தைரியமாக எதிர்கொண்டு, கடும் சவால்களைக் கடந்து தங்கள் பயணத்தைத் தொடர மேற்கொள்ளும் போராட்டங்களை நேயர்கள் காணலாம். 

களமிறங்கும் போட்டியாளர்களின் ஆற்றல், தைரியம், விடாமுயற்சி, நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை மற்றும் உற்சாகத்தை வெளிப்படுத்தும் ஒரு அசல் போட்டியாக இந்த நிகழ்ச்சி இருக்கும்”, என்கிறார்.

ஆகஸ்ட், 7, 2021 முதல் சர்வைவர் நிகழ்ச்சி தொடர்பான விளம்பர முன்னோட்டங்கள் வெளிவந்துள்ள நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இந்நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. விரைவில் அது பற்றிய அறிவிப்பும் வெளியாகும்.

நிகழ்ச்சியின் ஒவ்வொரு எபிசோடுகளையும்  முழுமையான காட்சிகளையும் ZEE 5 ஓடிடி தளத்திலும் பார்க்கலாம்.