‘சோனி லிவ்‘ ஓடிடி தளத்தில் வெளியாகும் 'தேன்'

டிஜிட்டல் வளர்ச்சியின் காரணமாக வந்த தொழில்நுட்பம்தான் ஓடிடி. தமிழில் ஏற்கெனவே, அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், சன் நெக்ஸ்ட், ஜீ 5 உள்ளிட்ட ஓடிடி தளங்கள் இருக்கின்றன.

அடுத்து புதிதாக ‘சோனி லிவ்’ தளமும் தமிழில் களமிறங்குகிறது.

இந்திய கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் தொடர்புடைய கதைகளை மக்களிடையே கொண்டு சேர்ப்பது தான் சோனி லிவ்வின் தலையாய முயற்சியாகும் என அந்நிறுவனத்தினர் சொல்கிறார்கள்.

சோனி லிவ் OTT தளத்தில், முதல் தமிழ்த் திரைப்படமாக, சமூகத்தின் யதார்த்தங்களை எடுத்துக்காட்டுகின்ற கதையாக அமைந்து விருது பெற்ற திரைப்படமான ‘தேன் ’ படம் ஜூன் 25ம் தேதியன்று வெளியாக இருக்கிறது.

ஒரு இளம், கிராமப்புற மற்றும் படிக்காத தேனீ வளர்ப்பவரின் பயணத்தை இந்த படம் காட்டுகிறது. அவர் தனது மனைவியை ஒரு அரிய நோயிலிருந்து காப்பாற்ற பல சவால்களை எதிர்த்துப் போராடுகிறார்.

வேலு (தருண் குமார்) மற்றும் பூங்கோடி (அபர்னதி) ஆகியோரின் வாழ்க்கையைச் சுற்றி அமைந்தது தான் தேன் படத்தின் மையக் கதை. துரதிர்ஷ்டவசமாக பூங்கோடி நோய்வாய்ப்பட்டு உயிருக்குப் போராடுகிறார். குடியுரிமையை நிரூபிப்பதற்கான சரியான ஆவணங்கள் இல்லாததால் பூங்கோடிக்கு மருத்துவ உதவியைப் பெற வேலு போராடுகிறார்.

அதிகாரத்துவ சிக்கல்கள் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பு இல்லாமை ஆகியவை, சமூகத்தின் யதார்த்தத்தை எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதை படத்தின் காட்சிகள் மற்றும் வசனங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கணேஷ் விநாயகன் இந்த படத்தை இயக்கி உள்ளார். அம்பலவாணன் பி, பிரேமா. பி & ஏபி புரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

பல்வேறு திரைப்பட விழாக்களில் ’தேன்’ திரையிடப்பட்டு 40-க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை பெற்றுள்ளது.

இந்தியன் பனோரமா 2020-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு தமிழ் படங்களில் இதுவும் ஒன்றாகும். 11-வது தாதா சாஹேப் பால்கே திரைப்பட விழா, டெல்லி என்.சி.ஆர், இந்தியா, கல்ட் கிரிட்டிக் திரைப்பட விருதுகள் 2020, புது தில்லி திரைப்பட விழா, அயோத்தி திரைப்பட விழா, அயோத்தி 2020 போன்ற பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.

இந்த படத்தில் பேசப்பட்டிருக்கும் சமூக செய்தி பார்வையாளர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி. தமிழைத் தவிர, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகிறது.