கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புத்தாண்டை முன்னிட்டு இன்று ஜனவரி 4 முதல் இரவு 9.30 மணிக்கு ‘சில்லுனு ஒரு காதல்’ என்ற புத்தம் புதிய தொடர் ஒளிபரப்பாகிறது.
நேர்மையான இளம் ஐபிஎஸ் அதிகாரிக்கும், துடிப்பான டீன்ஏஜ் வயது பெண்ணிற்கும் இடையே நிகழும் தினசரி சந்திப்புகள் மற்றும் நிகழ்வுகளை சித்தரிக்கும் தொடர் இது.
முதன்முறையாக பார்த்த உடனேயே சூர்யகுமாருடன் காதலில் விழும் கயல்விழி, அதன்பிறகு அவரோடு தொர்ந்து இருப்பதற்காக தளராத விடாமுயற்சியையும், தேடலையும் மேற்கொள்கிறாள். தனது தீவிர முயற்சியில் வெற்றி காணும் கயல்விழியை சூர்யகுமார் திருமணம் செய்கிறார். குடும்ப வாழ்க்கையைத் தொடங்கும் இந்த இளம் தம்பதியினரின் வாழ்க்கை கொந்தளிப்பு நிறைந்த திருமண வாழ்க்கையாக அமைகிறது.
ஐபிஎஸ் அதிகாரி சூர்யகுமாராக நடிக்கும் நடிகர் சமீர் அஹமது இத்தொடர் பற்றி கூறுகையில்,
“சில்லுனு ஒரு காதல்’ என்ற நெடுந்தொடர் மூலம் கலர்ஸ் தமிழ் அலைவரிசையோடு இணைவது எனக்கு பெரும் உற்சாகத்தைத் தருகிறது. எனது அறிமுக தொடரிலேயே ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக நடிப்பது ஒரு தனிச்சிறப்பான அனுபவமாகும். இந்த நெடுந்தொடரின் கதையும் மற்றும் நிகழ்வுகளும் மனதை ஈர்ப்பதாக இருக்கிறது. ஒரு சிக்கலான காதல் கதையில் ஒரு புதிய பரிமாணத்தை இது அழகாக சித்தரிக்கிறது. தொடக்கத்திலிருந்தே பார்வையாளர்களால் இத்தொடர் பெரிதும் வரவேற்கப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்கிறார்.
கயல்விழி கதாபாத்திரத்தில் நடிக்கும் தர்ஷினி பேசுகையில்,
“கலர்ஸ் தமிழ் குடும்பத்தின் ஒரு அங்கமாக இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ‘சில்லுனு ஒரு காதல்’ நெடுந்தொடரில் கயல்விழி கதாபாத்திரத்தில் நடிப்பது ஒரு புத்துணர்வூட்டும் அனுபவமாகும். அண்டை வீட்டில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணின் குணாதிசியங்களை உருவகப்படுத்துவதாக எனது கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. அதனால் பார்வையாளர்கள் அனைவருமே உடனடியாக அந்த கதாபாத்திரத்தோடு தங்களை எளிதாக தொடர்புபடுத்திக் கொள்ள இயலும். எதிர்பாராத திருப்பங்களையும் மற்றும் நிகழ்வுகளையும் இந்தக் கதை கொண்டிருப்பதால் அடுத்து என்ன நிகழப்போகிறது என்ற ஆர்வப் பெருக்கில் இருக்கையின் முனைகளுக்கே பார்வையாளர்களை இது கொண்டு வரும் என்பது நிச்சயம்,” என்கிறார்.