கலர்ஸ் தமிழ் டிவியில், ‘நம்ம மதுரை சிஸ்டர்ஸ்’ என்ற புத்தம் புதிய நெடுந்தொடர் இன்று பிப்ரவரி 21 முதல் ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7:00 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
‘திருடா திருடி’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை சாயா சிங், முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மதுரை மாநகரை கதைக்களமாகக் கொண்டுள்ள இத்தொடரில் தனித்துவமான பண்புகளைக் கொண்டிருக்கும் நான்கு சகோதரிகளின் வாழ்க்கைதான் கதையாக அமைந்துள்ளது.
பெற்றோர்களை சிறு வயதிலேயே பறிகொடுத்த பிறகு குடும்ப பொறுப்புகளை ஏற்கும் இந்திராணி என்ற இளம்பெண்ணின் வாழ்க்கையை சுற்றி பின்னப்பட்டிருக்கும் இக்கதையில் அன்பு, பாசம் மற்றும் அதிரடி திருப்பங்கள், எதிர்பாரா நிகழ்வுகள் அனைத்தும் இடம்பெற்று விறுவிறுப்பாக நகரும் விதத்தில் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாம்.
தனது பெற்றோர்களின் மரணத்திற்குக் காரணமானவர்களை எதிர்த்து போராடி வாழ்வில் ஜெயிக்கவும் தனது சகோதரிகளை பாதுகாப்பாக வளர்க்கவும் உறுதிமொழி ஏற்கும் இந்திராணி (சாயா சிங்), ஒரு அப்பாவி என்ற இளம் பெண் நிலையிலிருந்து எதையும் எதிர் கொள்ளக்கூடிய மன உறுதிவாய்ந்த பெண்ணாக புதிய அவதாரம் எடுக்கிறார். மேகலா (சுனிதா), புவனா (சங்கவி) மற்றும் காவியா (ஐரா அகர்வால்) என்ற மூன்று இளைய சகோதரிகளின் வாழ்க்கைப் பயணத்தையும் மனதை தொடும் விதத்தில் மிக அழகாக இக்கதை விவரிக்கிறது.
பிரபல சின்னத்திரை நடிகர் தீபக் குமார், காவியாவுக்கு (ஐரா அகர்வால்) எதிரான முதன்மை ஆண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சகோதரிகளுக்கிடையே ஏற்படும் குடும்ப அளவிலான போட்டிகளையும் இந்நெடுந்தொடர் ஆராய்கிறது.
கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் அவர்களது வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த முயற்சிக்கிற ராஜமாணிக்கம் (நடிகர் பார்த்தன்) என்ற இச்சகோதரிகளின் மாமாவின் சூழ்ச்சிகளையும், நடவடிக்கைகளும் விறுவிறுப்புடன் சொல்லப்படுகிறதாம்.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் வர்த்தகத் தலைவர் எஸ். ராஜாராமன், இந்நெடுந்தொடர் பற்றி கூறுகையில்,
“கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கிற்கு தமிழ் பேசும் மக்கள் விரும்பித் தேடும் இடமாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி உருவெடுத்திருக்கிறது. தடைகளை உடைத்து நொறுக்கி சாதித்திருக்கிற நிஜ வாழ்க்கையில் பெண் சாதனையாளர்களிடமிருந்து பெற்ற உத்வேகத்தால் எமது புதின நெடுந்தொடர்கள் உருவாக்கப்படுகின்றன. பாதிப்பு மற்றும் தோல்வியினால் துவண்டுவிடாமல் மன உறுதியையும் மற்றும் தைரியத்தையும் வெளிப்படுத்துகிற மற்றுமொரு அழகான கதையாக நம்ம மதுரை சிஸ்டர்ஸ் உருவாக்கப்பட்டிருக்கிறது. சகோதரிகளின் பாச உணர்வையும், நேசத்தையும் காட்சிப்படுத்துகிற மற்றும் உண்மையிலேயே கொண்டாடி மகிழ்கிற ஒரு தைரியமான முயற்சியாகவே இந்நெடுந்தொடர் இருக்கிறது. பார்வையாளர்கள் மற்றும் இரசிகர்கள் மத்தியில் இந்நிகழ்ச்சி பெரும் வரவேற்பையும், ஆதரவையும் பெறும் என்று நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம்,” என்கிறார்.
இந்நெடுந்தொடரின் இயக்குநர் ராஜா தனுஷ் இந்நிகழ்ச்சி பற்றி பேசுகையில்,
“இந்நெடுந்தொடருக்கான கதையானது கதாபாத்திர வடிவமைப்பு அம்சத்தில் உண்மையிலேயே மிகவும் வலுவானதாக இருக்கிறது. இக்கதாபாத்திரங்களோடு மனதளவில் ஒருமிக்க வைக்கும் திரைக்கதையின் ஒவ்வொரு எபிசோடும், பார்வையாளர்களை கட்டிப்போடக்கூடியதாக இருக்கும். இந்நெடுந்தொடருக்கான படப்பிடிப்பின் போதான எமது அனுபவம் மிக அற்புதமானதாக இருந்தது. எமது கதாபாத்திரங்களது கண்ணோட்டத்தின் வழியாக நாங்கள் சொல்லும் இந்த கதை சித்தரிப்பை பார்வையாளர்கள் அனைவரும் நிச்சயம் இரசித்து மகிழ்வார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” என்கிறார்.
முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் சாயா சிங் கூறுகையில்,
“குடும்பத்தில் வழக்கமாக ஆண்கள்தான் குடும்பத் தலைவர்களாக இருக்கின்றனர். நம்ம மதுரை சிஸ்டர்ஸ் கதையில் எனது கதாபாத்திரம், குடும்பங்களை ஒருங்கிணைப்பதிலும் மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு வழிகாட்டுவதிலும் ஆண்களுக்கு நிகரான திறன் கொண்டவர்களாகவே பெண்கள் இருக்கின்றனர் என்பதையும் ஆணித்தரமாக எடுத்துச் சொல்ல முற்படுகிறது. பெண்களின் வேறுபட்ட பரிமாணத்தை, நம்ம மதுரை சிஸ்டர்ஸ்-ல் எனது கதாபாத்திரம் மிகவும் வேறுபட்டு தனித்துவமானதாகத் திகழ்கிறது,” என்கிறார்.
நான்கு சகோதரிகளின் நுட்பமான அறிவையும் மற்றும் தைரியத்தையும் முன்னிலைப்படுத்தும் இந்நிகழ்ச்சியானது தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான ஆடு புலி ஆட்டம் என்ற பாரம்பரிய விளையாட்டின் அடிப்படை அம்சங்களிலிருந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆடுகளும், புலிகளும் இவ்விளையாட்டில் பங்கு வகிக்கின்றன. புலிகள், ஆடுகளை வேட்டையாட முற்படும்போது அப்புலிகளின் முயற்சியைத் தோல்வியுறச் செய்ய ஆடுகள் முயற்சிக்கின்றன. இக்கதைக்கருவை அடிப்படையாகக் கொண்ட நம்ம மதுரை சிஸ்டர்ஸ், அன்பு மற்றும் பாசத்திற்கு மத்தியில் மறைந்திருக்கிற குடும்ப அடிப்படையிலான போட்டி மனப்பான்மை என்ற கண்ணோட்டத்தை காட்சிப்படுத்த முனைகிறது.