கலர்ஸ் தமிழ் டிவியில் நடுவராக குஷ்பு

 கலர்ஸ் தமிழ் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள ‘Dance Vs Dance 2' நிகழ்ச்சி மூலம் மீண்டும் டிவி பக்கம் திரும்புகிறார் நடிகை குஷ்பு.

இதற்கு முன்பு ஜெயா டிவியில் ‘ஜாக்பாட்’, சன் டிவியில் ‘நிஜங்கள்’, ஜீ தமிழ் டிவியில் சிம்ப்ளி குஷ்பு’, உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறார்.

தீவிர அரசியலில் இறங்கிய காரணத்தால் சமீப காலமாக டிவி பக்கம் அவர் வரவில்லை. தற்போது கலர்ஸ் தமிழ் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள ‘Dance Vs Dance 2’ நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்கிறார். உடன் அவருடைய நெருங்கிய தோழியும் நடன இயக்குனருமான பிருந்தா மற்றொரு நடுவராகப் பங்கேற்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்கான முன்னோட்ட வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். 

இந்த புதிய புரோமோ குறித்து நடிகை குஷ்பூ கூறுகையில், 

“நடனம் என்பது ஒரு கலை, அது எப்போதும் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. நடனத்தின் மீது எனக்கு அதிக ஈடுபாடு உள்ளது. டான்ஸ் வெசர்ஸ் டான்சின் முதல் சீசனை நான் பார்த்தேன், மிகவும் அற்புதமானது. பிருந்தா என் பக்கத்தில் இருப்பது கேக் மீது ஒரு செர்ரி பழத்தை வைப்பது போன்றதாகும். எனவே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது எனக்கு இரட்டை மகிழ்ச்சி. மேலும், எப்போதும் புத்துணர்ச்சியூட்டும் மற்றும் முற்போக்கான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ் போன்ற தொலைக்காட்சியுடன் இணைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவை தடைகளை உடைத்து புதிய அளவுகோல்களை அமைக்கும். தமிழகத்தின் மிகச் சிறந்த பொழுது போக்கு சேனலாக திகழும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வேகமாக வளர்ந்து வருவதை நான் கண்கூடாகப் பார்க்கிறேன், அவர்கள் இணையற்றவர்களாக இருக்கிறார்கள் என்று என்னால் கூற முடியும்,” என்றார்.

பிரபல நடன இயக்குனரும் மற்றும் டிவிடி சீசன் 1 நடுவருமான பிருந்தாகூறுகையில், 

“நான் சீசன் 1 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருந்தேன், அதில் பிரம்மாண்டத்திற்குக் குறைவே இல்லை. சீசன் 2 இன்னும் நம்பிக்கைக்குரியதாகத் தோன்றுகிறது. மேலும் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்று நான் நம்பும் போட்டியாளர்களை சந்திக்க நான் உண்மையிலேயே ஆவலுடன் காத்திருக்கிறேன். மேலும் தற்போது ஒளிபரப்பாக உள்ள சீசன் 2 முற்றிலும் புதியது, மற்றும் முந்தைய சீசனில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இதுதவிர, ஒரு சிறந்த தோழியான குஷ்பூவுடன் நானும் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார்.