கலர்ஸ் தமிழ் - நாளை ‘நையப்புடை, வெல்வெட் நகரம்’ படங்கள் ஒளிபரப்பு

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் சன்டே சினி காம்போவில் நாளை பிற்பகல் 1 மணிக்கு ‘நையப்புடை’ படமும், மதியம் 3 மணிக்கு ‘வெல்வெட் நகரம்’ படமும் உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஒளிபரப்பாக உள்ளது.

விஜய கிரண் இயக்கத்தில் உருவான ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் ‘நையப்புடை’. 

ஊழலுக்குக்கு எதிராக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஒருவரின் தொடர் போராட்டங்களையும் மற்றும் உள்ளூர் கிரிமினல் தாதா ஒருவரின் பிடியிலிருந்து ஒரு தம்பதியினரை மீட்பதில் அவரது அதிரடி நடவடிக்கையையும் ‘நையப்புடை’ படத்தில் காணலாம். 

வெள்ளைச்சாமி என்ற கதாபாத்திரத்தில் இயக்குநர் S.A. சந்திரசேகரன்  நடித்திருக்கிறார். வறுமையில் வாடும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளை அக்கறையுடன் பராமரிக்கிற தர்ம சிந்தனையுள்ள நபரான வெள்ளைச்சாமியின் அமைதியான வாழ்க்கை, ஒரு தம்பதியினருக்கு அடைக்கலம் கொடுக்கும் போது எதிர்பாராத திருப்பங்களை சந்திக்கிறது. தப்பி ஓடி அடைக்கலம் கேட்கிற ஜோடியாக பா விஜய் மற்றும் சாந்தினி தமிழரசன் நடித்திருக்கின்றனர்.

வரலட்சுமி சரத்குமார் மற்றும் ரமேஷ் திலக் நடிப்பில் அறிமுக இயக்குநர் மனோஜ் குமார் நடராஜனின் இயக்கத்தில் வெளிவந்த ‘வெல்வெட் நகரம்’ உளவியல் திரில்லர் திரைப்படமாகும். 

நிஜ வாழ்க்கை நிகழ்வுகளின் அடிப்படையில் இத்திரைப்படத்தின் கதை அமைந்திருக்கிறது. ஒரு நடிகையின் கொலையின் பின்னணியில் உள்ள மர்மத்தை கண்டறிய முற்படும் ஒரு ஊடகவியலாளரைச் சுற்றி கதை பயணிக்கிறது. 

ரவுடிகளின் கும்பலால் அந்த பெண் ஊடகவியலாளர் சுற்றி வளைக்கப்படும்போது மிக ஆபத்தான சூழ்நிலையில் அவர் சிக்கிக்கொள்கிறார். அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் இப்படத்தின் கதை.