ஸ்ரீநாத் ராமலிங்கம் இயக்கத்தில் மைத்ரேயா ராஜசேகர், துஷாரா விஜயன், சாந்தினி தமிழரசன், ஆஷிக், நாஞ்சில் விஜமைம் கோபி, மயில்சாமி, பூ ராமு, இளவரசு ஆகியோருடன் அமிகோ என்ற நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘அன்புள்ள கில்லி’. இதில் நாய் அமிகோவுக்கு நகைச்சுவை நடிகர் சூரி பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார்.
தியேட்டர்களில் வெளியாகாமல் இப்படம் இன்று பிப்ரவரி 6ம் தேதி ஞாயிறு இரவு 7 மணிக்கு, கலர்ஸ் தமிழ் டிவியில் நேரடியாக வெளியாகிறது.
இயற்கை அழகு கொஞ்சும் கொடைக்கானல் பின்னணியில் இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சிறுவயது முதல் ஒன்றாக வளர்ந்து வரும் ராமு (மைத்ரேயா ராஜேசேகர்) மற்றும் கில்லி ( நாய் அமிகோ) ஆகிய இருவருக்கும் இடையில் உள்ள அழகான அன்பை படம் பிடித்துக் காட்டுகிறது. ராமு அவனது குழந்தைப் பருவ தோழியான பார்கவி (சாந்தினி தமிழரசன்) மற்றும் பக்கத்து வீட்டில் வசிக்கும் இளம் பெண்ணான அன்விதா (துஷாரா விஜயன்) ஆகியோரோடு முக்கோண காதலில் சிக்கிக் கொள்ளும் பிரச்சினையும் படத்தில் உண்டு.
தனது நண்பனான ராமு காதலில் வெற்றி காணவும், உண்மையான காதலை கண்டறியவும் தோழனான கில்லி, ராமுவிற்கு உதவுகிறது. எனினும், ஈவு இரக்கமற்ற வகையில் வனவிலங்குகளைக் கொன்று குவிக்கும் tனத் துறை அதிகாரி சுந்தர் (மைம் கோபி) இவர்களது வாழ்க்கையில் குறுக்கிடும் போது ஒரு புயலே உருவாகிறது. சுந்தரின் கோரப் பிடிகளிலிருந்து ராமுவும், கில்லியும் எப்படி தப்பித்து வெற்றி கண்டனர் என்பதே இப்படத்தின் கதை.
கலர்ஸ் தமிழின் பிசினஸ் ஹெட் எஸ். ராஜாராமன் இத்திரைப்படத்தின் ப்ரீமியர் நிகழ்வு குறித்து பேசுகையில்,
“எமது பார்வையாளர்களுக்கு உயர்தரமான நிகழ்ச்சிகளை வழங்க கலர்ஸ் தமிழில் நாங்கள் தொடர்ந்து முனைப்புடன் செயலாற்றி வருகிறோம். எங்களது நிகழ்ச்சியின் தொகுப்பை இன்னும் ஆர்வமூட்டுவதாக ஆக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு எமது நிகழ்ச்சி நிரலில் திரைப்படங்களை தவறாமல் இடம் பெறும் ஒரு அங்கமாக ஆக்குவதற்கு நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். மாதத்தின் திரைப்படம் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக புதிதாக வெளியான திரைப்படங்களை கண்டு ரசித்து புத்துணர்ச்சி பெறும் இனிய அனுபவத்தை எமது பார்வையாளர்கள் ஏற்கனவே பெற்றிருக்கின்றனர். தங்களது இல்லங்களில் சௌகரியமாக அமர்ந்துகொண்டே சமீபத்திய திரைப்படங்களைப் பார்ப்பது ஒரு அற்புதமான அனுபவம். கலர்ஸ் தமிழில் பிரத்யேகமாக நேரடி சாட்டிலைட் ப்ரீமியர் ஒளிபரப்பாக ‘அன்புள்ள கில்லி’ வெளியாவது இந்த சிறப்பான செயல்திட்டத்தின் ஒரு அங்கமே,” என்கிறார்.
நாய் கில்லிக்கு பின்னணி குரல் கொடுத்த அனுபவம் பற்றி நகைச்சுவை நடிகர் சூரி பேசுகையில்,
“பார்வையாளர்களையும், ரசிகர்களையும் சென்றடையவும், மகிழ்ச்சிப்படுத்தவும், உற்சாகமூட்டவும் இரண்டு மிகச்சிறந்த வழிமுறைகளாக திரைப்படங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இருக்கின்றன. இத்திரைப்படத்தில் செல்லமாக வளர்க்கும் ஒரு நாயின் கதாபாத்திரத்திற்கு எனது குரலை வழங்கும் எனது தனித்துவமான முயற்சி எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. கலர்ஸ் தமிழ் வழியாக இல்லங்களில் உள்ள அனைத்து பார்வையாளர்களையும் மிகப்பெரிய அளவில் இத்திரைப்படம் சென்றடையும் என்பது கூடுதல் திருப்தியளிக்கிறது. இப்பணியில் ஈடுபட்டது ஒரு இனிய அனுபவமாக இருந்தது, அதே நேரத்தில் சவாலானதாகவும் இருந்தது. இத்திரைப்படத்தில் எனது குரலை பார்வையாளர்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியோடு ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்கிறார்.
இத்திரைப்படத்தின் இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் பேசுகையில்,
“எனது இயக்கத்தில் வேறு படங்கள் வந்திருந்த போதிலும், இதன் தனித்துவமான கருத்தாக்கத்தின் காரணமாக, ‘அன்புள்ள கில்லி’ எனது நெஞ்சத்திற்கு மிகவும் நெருக்கமானதாக எப்போதும் இருக்கும். நேரடி சாட்டிலைட் ப்ரீமியராக இத்திரைப்படம், கலர்ஸ் தமிழ் போன்ற ஒரு பிரபலமான சேனலில் ஒளிபரப்பாவது இன்னும் அதிக மகிழ்ச்சியையும், பிரமிப்பையும் தருகிறது. பல்வேறு உணர்வுகளின் சங்கமமாக உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் பார்வையாளர்களின் மனதை நெகிழ வைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்கிறார்.