விடாமுயற்சி – விமர்சனம்
06 Feb 2025
தயாரிப்பு - லைக்கா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - மகிழ் திருமேனி
இசை - அனிருத்
நடிப்பு - அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ்
வெளியான தேதி - 6 பிப்ரவரி 2025
நேரம் - 2 மணி நேரம் 34 நிமிடம்
தன்னை விட்டுப் பிரிந்து செல்லும் மனைவி திடீரெனக் காணாமல் போகிறார். கடத்தப்பட்ட அவரை கணவன் தேடிக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி உள்ள படம்.
படம் முழுவதும் அஜர்பைஜான் நாட்டில் உள்ள ஆள் அரவமற்ற ஒரு நெடுஞ்சாலையில் நடக்கிறது. காதலித்துத் திருமணம் செய்து கொண்ட அஜித், த்ரிஷா 12 வருடங்களுக்குப் பிறகு பிரிவதென்று முடிவெடுக்கிறார்கள். ஜார்ஜியா நாட்டின் ட்பிலிசி நகரத்தில் உள்ள த்ரிஷாவின் பெற்றோரிடம் அவரை விட அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரத்திலிருந்து நெடுஞ்சாலை வழியாகக் காரில் கூட்டிச் செல்கிறார் அஜித். வழியில் கார் ரிப்பேர் ஆகிவிட, அந்த வழியாக டிரக் ஓட்டி வந்த அர்ஜுன், ரெஜினா ஆகியோருடன் அனுப்பி வைக்கிறார். கொஞ்சம் தொலைவில் உள்ள ஒரு இடத்தில் அவரை இருக்கச் சொல்லி அனுப்புகிறார். வந்து பார்த்தபோது த்ரிஷாவை அங்கு காணவில்லை. யாரோ கடத்தியுள்ளார்கள் என்பது மட்டும் தெரிகிறது. அதன்பின் மனைவி த்ரிஷாத் தேடிச் செல்கிறார். அவரை கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படம் முழுவதும் ஒரு நெடுஞ்சாலைப் பயணமாகவே இருக்கிறது. அதற்கேற்றபடி அந்த லொகேஷனும், அதைப் படமாக்கிய விதமும்தான் இந்தப் படத்தின் முக்கிய ஹைலைட். மொழி சரியாகத் தெரியாத இடத்தில் ஒரு கணவனுக்கு நடக்கும் அந்த இரண்டரை மணி நேரத் தவிப்புதான் படம். தனியொருவராக படத்தைத் தாங்கிப் பிடிக்கிறார் அஜித். ஆரம்ப அரை மணி நேரத்தில் காதல் மன்னன் அஜித், காதல் ராணி த்ரிஷா ஆகியோரு காதல் காட்சிகள் நம்மை பல வருடங்களுக்குப் பின்னால் அழைத்துச் செல்கிறது. அப்படிக் காதலித்தவர்கள் திடீரெனப் பிரிய முடிவெடுப்பது நமக்கு அதிர்ச்சிதான் என்றாலும் அதற்கான காரணத்தை இன்னும் அழுத்தமாகச் சொல்லி இருக்கலாம். ரொமான்ஸ் காட்சிகளில் அஜித்தைப் பார்ப்பது அவரது ரசிகர்களுக்கு ஆனந்தமாக இருக்கும். த்ரிஷாவும் அதே இளமையுடன் இருக்கிறார். ஆரம்ப காதல் காட்சிகளுடன் த்ரிஷாவின் முக்கியத்துவம் முடிந்துவிடுகிறது.
எப்போது அஜித் ஆக்ஷன் ஹீரோவாக மாறுவார் என நாம் காத்திருக்க சரியான ஒரு நேரத்தில் அதைச் செய்திருக்கிறார் இயக்குனர். அதன்பின் படம் பரபரவென நகர்ந்து முடிகிறது.
படத்தின் முக்கிய வில்லன் அர்ஜுன். அவரும் ரெஜினாவும் சிறைச்சாலையில் சந்தித்து பழகியவர்கள். இருவருமே சைக்கோ குணம் கொண்டவர்கள். பெண்களைக் கடத்தி பணம் பறிப்பதுதான் அவர்களது வேலை. கொஞ்சம் பழைய ஸ்டைல் ஆக இருந்தாலும் அர்ஜுன், ரெஜினா இருவரது சைக்கோத்தனமும் மிரள வைக்கிறது. குறிப்பாக ரெஜினா இதுவரையில் இவ்வளவு அழுத்தமான கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவில் நடித்தது இல்லை. அர்ஜுன் நடிப்புப் பற்றி சொல்ல வேண்டாம், வழக்கம் போல அசத்தியுள்ளார். அவரது அடியாட்களில் ஒருவராக ஆரவ். ஆரம்பத்தில் அஜித்துடன் மோதும் காட்சியில் அசத்தியுள்ளார்.
அனிருத்தின் இசையில் ‘சவடீக்கா’ பாடல் ஆரம்பத்திலேயே ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசையில் பரபரப்பான காட்சிகளில் முடிந்தவரையில் பரபரப்பைச் சேர்த்துள்ளார். ஆனால், இன்னும் அதிகமாகக் கொடுத்திருக்கலாமோ என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் மொத்த படத்தையும் ஹாலிவுட் படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்திருக்கிறார். கேமரா கோணங்கள், பருந்துப் பார்வை கோணங்கள் என பல கோணங்களில் அவரது கேமரா சிறப்பாகப் பயணித்திருக்கிறது. தேவையற்ற காட்சிகள் இல்லாமல் படத்தை அழகாக செதுக்கியிருக்கிறார் எடிட்டர் என்பி ஸ்ரீகாந்த். சுப்ரீம் சுந்தர் சண்டைக் காட்சிகள் ஒவ்வொன்றும் அசத்தல்.
காதலும், எமோஷனுலும் கலந்த ஒரு படம். அதை ஹாலிவுட் பாணியில் புதுவிதமாய் கொடுத்திருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி. வித்தியாசமான படங்களை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த விடாமுயற்சி ஒரு விருந்து.
Tags: vidamuyarchi, ajithkumar, trisha, arjun, regina, magizh thirumeni, anirudh