சாம் ஆண்டன் இயக்கத்தில், அதர்வா, தான்யா, அருண் பாண்டியன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

காவல் துறையில் வேலை பார்க்கும் அதர்வா, தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டாலும் கமிஷனரால் அண்டர் கவர் ஆபீசராக வேலை பார்க்க நியமிக்கப்படுகிறார். காவல் துறையில் தவறுகளைச் செய்பவர்களைக் கண்டுபிடிப்பதுதான் அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலை. அப்படி ஒரு வேலை செய்யும் போது ஒரு பெண் கடத்தல், ஓரு குழந்தை கடத்தல் நடக்கிறது. அதைத் தொடர்ந்து நேரடியாகக் களத்தில் இறங்குகிறார் அதர்வா. அந்தக் கடத்தல்களின் பின்னணி என்ன என்பதை அவர் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா இதற்கு முன்பு நடித்த ‘100’ படத்திலேயே போலீஸ் கதாபாத்திரத்தில் பொருத்தமாக நடித்திருப்பார். இந்தப் படத்திலும் அப்படியே 100 சதவீதம் அந்தக் கதாபாத்திரத்தில் பொருந்தி இருக்கிறார். தான்யாவுக்குக் குறைவான காட்சிகள்தான் என்றாலும் முக்கியமான காட்சிகள். 

படத்தில் வில்லன் நடிகர் வழக்கமான தமிழ் சினிமா வில்லனாகவே காட்டப்பட்டது ஒரு குறை. முனிஷ்காந்த், நிஷா, அன்புதாசன், சின்னி ஜெயந்த் ஆகியோர் கொண்ட அணிதான் அதர்வாவுடையது. அவர்களில் சின்னி ஜெயந்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.

க்ரைம் திரில்லர் படமாகக் கொடுத்திருக்கிறார்கள். முதல் பாதியைப் பொறுமையுடன் கடந்தால் இரண்டாவது பாதி ரசிக்க வைக்கும்.