சிக்சர் - விமர்சனம்

01 Sep 2019
கதை நாயகன் வைபவ்வுக்கு மாலை 6 மணிக்கு மேல் பார்வை தெரியாது. அப்படிப்பட்டவருக்கு பல்லாக் லால்வானி மீது காதல். அவரிடம் தனக்கு இருக்கும் குறையை மறைத்து அவரைக் காதலிக்கிறார். வைபவ் பார்வை தெரியாமல் செய்யும் சில செயல்களால் வில்லன் ஆர்என்ஆர் மனோகர் சிறைக்குச் செல்ல நேரிடுகிறது. சிறையிலிருந்து திரும்பும் அவரை வைபவ்வைக் கொல்லத் துடிக்கிறார். இதனிடையே, வைபவ் குறை பற்றி பல்லாக் அப்பா ராதாரவிக்கும் தெரிய வருகிறது. இந்த சூழ்நிலையில் வைபவ், பல்லாக் திருமணம் நிச்சயமாகிறது. அவர்களது திருமணம் நடந்ததா, வைபவ் வில்லனிடமிருந்து தன்னை காத்துக் கொண்டாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை. நடிப்பு படத்தின் கதாநாயகன் வைபவ்வுக்கு நகைச்சுவை நடிப்பும் நன்றாகவே வருகிறது. ஆறு மணிக்கு மேல் பார்வை தெரியாமல் தடுமாறுவதும், அதைக் காதலியிடம் மறைக்க திண்டாடுவதும் என காட்சிகளிலேயே நகைச்சுவை இருப்பதால் அவருக்கும் எளிதாகிறது. பல்லாக் லால்வானிக்கு நடிப்பு கொஞ்சம் சுமாராகத்தான் வருகிறது. இருந்தும் எப்படியோ சமாளிக்கிறார். வைபவ்வின் நண்பனாக சதீஷ். வழக்கம் போல கதாநாயகனின் நண்பர்கள் என்ன செய்வார்களோ அதை இவர் கொஞ்சம் கூடுதலாகச் செய்கிறார். வைபவ்வின் அப்பா இளவரசு, அம்மா ஸ்ரீரஞ்சனி, பல்லாக் அப்பா ராதாரவி ஆகியோரின் நடிப்பில் அனுபவம் தெரிகிறது. இசை, மற்றவை ஜிப்ரான் இசையில் பாடல்கள் தேறவில்லை. நகைச்சுவைப் படமென்பதால் பின்னணி இசைக்கெல்லாம் படத்தில் முக்கியத்துவமில்லை.

+

கலகலப்பாக நகரும் திரைக்கதை, சுவாரசியமான காட்சிகள்.

-

காமெடி படம் என்பதால் லாஜிப் பற்றி பெரிதாகக் கவலைப்படவில்லை. இன்னும் கொஞ்சம் முயற்சித்திருந்தால் சூப்பர் ஹிட் காமெடி படமாக வந்திருக்கும். சிக்சர் அடிக்க முயற்சித்து ‘ஃபோர்’ அடித்திருக்கிறார்கள்.  

Tags: sixer

Share via: