சிவப்பு மஞ்சள் பச்சை - விமர்சனம்

09 Sep 2019
கதை அப்பா,  அம்மா இல்லாததால் சிறு வயதிலிருந்தே அத்தையின் ஆதரவில் தனியாக வளர்ந்து வருபவர்கள் அக்கா லிஜிமோள் ஜோஸ், தம்பி ஜி.வி.பிரகாஷ்குமார். ஜிவி பிரகாஷ் பைக் ரேசில் அக்காவுக்குத் தெரியாமல் அடிக்கடி கலந்து கொள்பவர். பைக் ரேஸ் ஓட்டி வரும் ஜிவி பிரகாஷை ஒரு நாள் டிராபிக் இன்ஸ்பெக்டரான சித்தார்த் பிடித்து அவமானப்படுத்துகிறார். அதனால் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் ஜிவி. மறுநாள் லிஜோமோளைப் பெண் பார்க்க வருகிறார்கள். அங்கு அக்காவைப் பெண் பார்க்க வந்தது சித்தார்த் என்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார் ஜிவி. சிறு வயதில் அக்காவுக்கு தான்தான் மாப்பிள்ளை பார்ப்பேன் என்று சத்தியம் வாங்கியதை நினைத்து அந்த திருமணத்தைத் தடுக்க நினைக்கிறார். ஆனால், அதையும் மீறி திருமணம் நடக்கிறது. அதன் பின்பாவது மாமனும், மச்சானும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதை. நடிப்பு ஒரு எமோஷனல் திரைப்படமாக இருப்பதால் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள அனைவருக்குமே நடிக்க நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை அனைவருமே சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பொறுப்பான டிராபிக் இன்ஸ்பெக்டராக முதல் முறையாக அனைவரையும் கவரும் விதத்தில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் சித்தார். அவரது நடிப்பில் வழக்கமா இருக்கும் ஒரு அலட்டல் இந்தப் படத்தில் துளியும் இல்லை. ஜிவி பிரகாஷின் நடிப்புக்கு இந்தப் படம்தான் திருப்புமுனையாக அமையும். அக்காவுக்குப் பொறுப்பான தம்பி. அக்கா மீது அவ்வளவு பாசம். ஆனால், பைக் ரேஸில் மட்டும் லோக்கலாக இறங்கும் இளைஞர் என மதன் கதாபாத்திரத்தில் அப்படியே தன்னை மாற்றிக் கொண்டுள்ளார். ஜிவி பிரகாஷின் அக்காவாக லிஜோமோள் ஜோஸ். யதார்த்தமான முகம், யதார்த்தமான நடிப்பு. தமிழ் சினிமாவில் குடும்பத்து கதாநாயகியாக மிளிர்வதற்கு அனைத்துத் தகுதிகளும் அவருக்கு இருக்கிறது. கண்களிலேயே அதிகம் பேசுகிறார். ஜிவி பிரகாஷ் ஜோடியாக காஷ்மிரா. கிடைத்த குறைவான வாய்ப்பையும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அத்தையாக ‘நக்கலைட்ஸ்’ தனம், தமிழ் சினிமாவுக்குப் புதிய அம்மா வரவு. இசை, மற்றவை சித்துகுமார் இசையில் சில பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. எமோஷனல் படத்தில் டெக்னிக்கல் விஷயங்கள் எப்படிஇருக்க வேண்டுமோ அப்படியே இருக்கின்றன.

+

மாமன் - மச்சான் உறவு பற்றிய கதை, அக்கா - தம்பி பாசம், அனைவரின் இயல்பான நடிப்பு

-

சினிமாத்தனமான கிளைமாக்ஸ்

Tags: sivappu manjal pachai

Share via: