கொரானோ காலத்தில் ஓடிடி தளங்கள் பிரபலமான பின் வெப் சீரிஸ் என அழைக்கப்படும் இணையத் தொடர்களுக்கும் தனி பிரபலம் கிடைத்தது. இதுவரையில் வெளிவந்த இணையத் தொடர்களில் த்ரில்லர் கதைகள்தான் அதிகம் இருந்தது. ஆனால், முதல் முறையாக அரசியலை மையமாக வைத்து ஒரு த்ரில்லர் கதை வந்திருப்பது இதுவே முதல் முறை.
‘விலங்கு, அயலி’ என இணையத் தொடர்கள் மூலம் சினிமா ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்த ஜீ 5 மீண்டும் இந்த ‘செங்களம்’ மூலம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
‘சுந்தரபாண்டியன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து சில படங்களை இயக்கிய எஸ்ஆர் பிரபாகரன் இயக்கியிருக்கும் முதல் இணையத் தொடர் இது. முதல் தொடரிலேயே அரசியலைக் கதைக்களமாகக் கொண்டு இந்த ‘செங்களம்’ தொடரை பரபரப்பாகக் கொடுத்திருக்கிறார். தமிழ்நாட்டு அரசியலில் கடந்த சில வருடங்கள் வரை பரபரப்பாகப் பேசப்பட்ட ‘உடன் பிறவா சகோதரி’ அரசியல்தான் இந்தத் தொடரின் மையம். அதைச் சுற்றி ஒரு குடும்பத்தின் வாரிசு அரசியலையும் சேர்த்து ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.
இன்று, அன்று ஒரு நாள் என இரண்டு வகையாகத் தொடர் நகர்கிறது. ‘இன்று’ என்பதில் கலையரசன், அவரது தம்பிகள் டேனியல் அனி போப், லகுபரன் இதற்கு முன்னர் மூன்று கொலைகளைச் செய்துவிட்டு, அடுத்து எம்எல்ஏ உள்ளிட்ட சிலரைக் கொலை செய்கிறார்கள். ‘அன்று ஒரு நாள்’ என்பதில் விருதுநகர் நகராட்சியை கடந்த நாற்பது வருடங்களாக தங்களது குடும்ப சொத்து போல ஆட்சி செய்து வரும் சரத் லோகித்சவா குடும்பத்தைப் பற்றிய கதையாக நகர்கிறது. அந்தக் குடும்பத்தை ஆளும் கட்சி வீழ்த்த நினைக்கிறது. ‘இன்று’ நடக்கும் கதைக்கும், ‘அன்று ஒரு நாள்’ நடக்கும் கதைக்கும் என்ன தொடர்பு என்பதுதான் தொடரின் மீதிக் கதை.
தமிழ்நாட்டில் முன்னர் ஆட்சி செய்து மறைந்த ஒரு பெண் முதல்வரையும், அவருடைய நெருங்கிய தோழியையும் ஞாபகப்படுத்தும் விதத்தில் இத்தொடரில் இரண்டு கதாபாத்திரங்கள் இருக்கின்றன. விருதுநகர் சேர்மன் பதவிக்கு நின்று வெற்றி பெறும் சரத் லோகித்சவாவின் மருமகள் வாணி போஜன், அவரது தோழி ஷாலி நிவேகாஸ் கதாபாத்திரங்கள் தான் அவை. வாணியை சிலர் திடீரென கொன்றுவிட அவரது இடத்தை ஷாலி எப்படி நிரப்புகிறார் என்பதை அரசியல் ஆச்சரியங்களுடன் கொடுத்திருக்கிறார்கள். வாணி, ஷாலி இருவருக்கும் மிகவும் அழுத்தமான, கனமான கதாபாத்திரங்கள். அவர்களது கதாபாத்திரத்தின் தன்மையைப் புரிந்து கொண்டு நடித்திருக்கிறார்கள்.
கலையரசன் தான் இத்தொடரின் நாயகன். காட்டுப் பகுதிக்குள் மறைந்து கொண்டு எம்எல்ஏ உதவியாளர், எம்எல்ஏ ஆகியோரைக் கொலை செய்து போலீஸ் கண்களில் சிக்காமல் இருக்கிறார். அதற்கு முன்பே மூன்று கொலைகளையும் செய்தவர். அவர் இப்படி கொலைகளை ஏன் செய்கிறார் என்பதை போகப் போகச் சொல்கிறார்கள். கலையரசனின் தம்பிகளாக டேனியல், லகுபரன் அண்ணன் பேச்சைத் தட்டாத தம்பிகளாக நடித்திருக்கிறார்கள்.
விருதுநகர் அரசியலின் மையமாக சரத் லோகித்சவாவின் குடும்பம்தான் இருக்கிறது. அந்தக் குடும்பத்தின் மூத்த வாரிசான பவன் நகராட்சித் தலைவராக இருக்கிறார். வாணி போஜனை திருமணம் செய்து கொள்கிறார். பவன் திடீரென விபத்தில் இறக்க, வாணி போஜன் பின்னர் தலைவராகிறார். அந்தப் பதவிக்கு பவனின் தம்பி பிரேம், தங்கை பூஜா வைத்யநாத் ஆசைப்பட்டு ஏமாந்து போகிறார்கள். தனது குடும்பத்தின் மரியாதையை விட்டுக் கொடுக்கவே கூடாது என நினைக்கும் சரத் பின்னர் மருமகள் வாணி, அவரது தோழி ஷாலி செய்யும் அரசியலில் ஏமாந்து தோற்றுப் போய்விடுகிறார்.
ஆளும் கட்சியின் எம்எல்ஏவாக வேலராமமூர்த்தி, மாவட்டச் செயலாளராக முத்துக்குமார், கலையரசனின் அம்மாவாக விஜி சந்திரசேகர், கலையரசனை பிடிக்கத் துடிக்கும் இன்ஸ்பெக்டராக அர்ஜய் ஆகியோரும் அவரவரர் கதாபாத்திரங்களில் நிறைவாய் நடித்திருக்கிறார்கள்.
தரண் குமார் இசையும், வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவும் இயக்குரின் தோழமைக் கூட்டணியாக சரியான பலத்துடன் இணைந்திருக்கிறார்கள்.
மொத்தம் உள்ள 9 அத்தியாயங்களில் முதல் 5 அத்தியாயங்கள் கொஞ்சம் மெதுவாக நகர்கின்றன. கடைசி 4 அத்தியாயங்கள் எதிர்பாராத அரசியல் திருப்பங்களால், விளையாட்டுக்களால் பரபரப்பாய் நகர்கின்றன. இரண்டாம் சீசனுக்கான எதிர்பார்ப்புடன் இந்த முதல் சீசனை முடித்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டு அரசியலை ஞாபகப்படுத்தும் கதைக்களம் என்பதால் இந்த செங்களத்தை ரசிக்கலாம்.