ரோமியோ ஜுலியட் - விமர்சனம்
13 Jun 2015
‘ரோமியோ – ஜுலியட்’ என அருமையான காதல் ஜோடியின் பெயரை படத்தின் தலைப்பாக வைத்து விட்டு, காதலர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொள்வதை முழு படமாக எடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் லட்சுமண். காதல் என்பது அதை மதிப்பதிலும், உணர்வதிலும்தான் இருக்கிறது. ஆனால், இந்தப் படத்தில் படத்தின் நாயகன் ஜெயம் ரவி மீது, நாயகி ஹன்சிகாவிற்கு வரும் காதல் அவர் மீது வரவில்லை, அவர் பணத்தின் மீதுதான் வருகிறது. சரி, அதன் பிறகாவது, மாறுமோ என்று பார்த்தால், ஹன்சிகாவைப் போன்ற வேறொரு பெண்ணை தனக்கு காதலியாக ‘செட்’ செய்து கொடுக்க வேண்டும் என ஹன்சிகாவிடமே சொல்கிறார் ஜெயம் ரவி. அப்புறம் என்ன வழக்கம் போல காதல் ஜோடிகள் ஒன்று சேர சுபம். எந்த விதமான ட்விஸ்ட்டும் இல்லாமல், கலகலப்பான, சுவாரசியமான காட்சிகளும் இல்லாமல் வெறும் ஜெயம் ரவி, ஹன்சிகா ஆகியோரை வைத்தே இரண்டரை மணி நேரப் படத்தையும் நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். ஏதோ, நகைச்சுவைக்கு என கொஞ்ச நேரம் விடிவி கணேஷ் வருகிறார். பூனம் பஜ்வா எதற்கு வருகிறார், என்ன செய்கிறார், அவர் ஜெயம் ரவியைக் காதலிக்கிறாரா என்பதைக் கூடத் தெளிவாகச் சொல்லவில்லை. படத்தின் நாயகியான ஹன்சிகாவைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு ஏமாந்து போகும் வழக்கமான தமிழ் சினிமா மாப்பிள்ளை கதாபாத்திரத்தில் வம்சி கிருஷ்ணா. ஜெயம் ரவி, கட்டுமஸ்தாக கணீரென்று இருக்கிறார். அதனால்தான் அவரைப் பார்த்ததும் ஹன்சிகா காதலில் விழுகிறார் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். இருந்தாலும் ஜெயம் ரவி அவருடைய வழக்கமான நடிப்பால் வசீகரம் செய்து விடுகிறார். நல்ல கதைகளாகத் தேர்ந்தெடுத்து நடியுங்கள் ரவி, உங்களுக்கென தனி இடம் தமிழ் சினிமாவில் இருக்கிறது. இன்றைக்கும் உங்கள் நல்ல நல்ல படங்கள் டிவியில் ஒளிபரப்பாகும் போது, அனைத்து பெண்களும், குடும்பத்தினரும் ரசித்துப் பார்க்கிறார்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். ஹன்சிகாவை, கொஞ்சம் லூசுத்தனமாகவே காட்டியிருக்கிறார்கள். எல்லாவற்றிலும் அவசரப்படுகிறார், எதையும் யோசிக்காமல் செய்கிறார், காதலனை அடிக்க அடியாட்களை வேறு ஏற்பாடு செய்கிறார். தமிழ் சினிமாவில் கதாநாயகிகளை ஏன்தான் இப்படி காட்டுவார்களோ, புத்திசாலிகளாக காட்டவே மாட்டார்களா…அனாதையாக வளர்ந்தவர், இப்படி பணத்திற்காக ஆசைப்படுபவர் என்பதெல்லாம் நம்பும்படியாகவா உள்ளது. தான் மட்டும் வசதியாக வாழாமல் மற்றவர்களும் நன்றாக வாழ வேண்டும் என்று நினைக்கும் விதத்தில்தான் அவர்களை ‘ஹோம்‘-ல் நல்ல குணங்களை சொல்லி வளர்ப்பார்கள். படத்திற்காக எப்படி வேண்டுமானாலுமா காட்டுவது… இமான் இசையில் ‘டண்டணக்கா…’ பாடலும், தூவானம்...பாடலும் ரசிக்க வைக்கிறது. சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு ஒவ்வொரு காட்சியையும் அழகுணர்வுடன் படமாக்கியிருக்கிறது. ஒரு படத்திற்கு ஜெயம் ரவி, ஹன்சிகா போன்ற நட்சத்திரங்கள் மட்டும் கிடைத்தால் போதாது, அவர்களை வைத்து நல்ல கதையுடன் கூடிய படத்தையும் கொடுக்க வேண்டும்.