பெல்லினி இயக்கத்தில், அரவிந்த்சாமி, குஞ்சாக்கோ போபன், ஈஷா ரெப்பா மற்றும் பலர் நடித்துள்ள படம்.

குஞ்சாக்கோ போபன் தனது காதலி ஈஷா ரெப்பாவுடன் வெளிநாட்டில் சென்று செட்டிலாக திட்டமிடுகிறார். அந்த சமயத்தில் மும்பையில் தாதா கூட்டத்தைச் சேர்ந்த, ஒரு துப்பாக்கிச் சூட்டில் தனது நினைவுகளை இழந்த அரவிந்த்சாமியுடன் பழகி அவரிடமிருந்து ஒரு தங்கக் கடத்தல் பற்றிய உண்மைகளை அறிய வேண்டும் என்ற ஒரு வேலையைச் செய்ய இறங்குகிறார். அரவிந்த்சாமியுடன் பழகி அவருக்கு நெருக்கமாகிறார். அவரிடம் ரகசியத்தைப் பற்றி அறியும் போது கதையில் ஒரு பெரிய திருப்புமுனை நடக்கிறது. அது என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

தமிழ் சினிமா பல மும்பை தாதா கதைகளைப் பார்த்துள்ளது. இந்தப் படம் ஒரு மாறுபட்ட தாதா படம். இயக்குனர் பெல்லினி தமிழ் ரசிகர்களைப் பற்றி புரிந்து கொண்டு இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார். மலையாளத்தில் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த இந்தப் படம் அங்குள்ள ரசிகர்களுக்கு பிடிக்காமல் போனது ஆச்சரியம்.

அதிரடியான தாதாவாக இருந்த அரவிந்த்சாமி நினைவுகளை இழந்ததால் அமைதிப் புறாவாக மாறி ஒரு தியேட்டரில் பார்ப்கார்ன் கடை வைத்து பிழைக்கிறார். அவரைத் தேடிப் போய்ப் பழகி கொஞ்சம் கொஞ்சமாக நட்பாகிறார் பணத்திற்காக வேலை செய்யும் குஞ்சாக்கோ. இருவருக்கும் இடையிலான ஒரு கார்ப் பயணம், பேச்சுகள் தான் படத்தின் கதை. பயணம் போலவே விறுவிறுப்பாக நகர்கிறது. இருவருமே அவரவர் கதாபாத்திரங்களில் சிறப்பாய் நடித்திருக்கிறார்கள்.

ஈஷா ரெப்பா, ஜாக்கி ஷெராப் ஆகியோருக்கு அதிக வேலையில்லை. ஒரு சில காட்சிகள் என்றாலும் அழுத்தமான காட்சிகள்தான். 

காஷிப் பின்னணி இசை, கௌதம் சங்கர் ஒளிப்பதிவு படத்தை வேறு ஒரு தளத்திற்குக் கொண்டு செல்கிறது.

மூன்று பாகங்களாகத் திட்டமிடப்பட்டுள்ள படத்தின் இரண்டாம் பாகம் இது. இதற்கு முந்தைய முதல் பாகமும், அடுத்த மூன்றாம் பாகமும் பின்னர் வெளியாகும் எனத் தெரிகிறது.

மாறுபட்ட கதைகளை தமிழ் ரசிகர்கள் வரவேற்பது வழக்கம். இந்தப் படத்திற்கு அப்படியொரு வரவேற்பு நிச்சயம் கிடைக்கும்.