தயாரிப்பு - லார்க் ஸ்டுடியோஸ்
இயக்கம் - ஜான்சன்
இசை - சந்தோஷ் நாராயணன்
நடிப்பு - சந்தானம், அனைகா
ரேட்டிங் - 2.75/5

நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக மாறினாலும் தொடர்ந்து தன்னுடைய படங்களை நகைச்சுவைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து உருவாக்குவதற்கு சந்தானத்திற்கு நன்றி சொல்ல வேண்டும்.

இந்தக் காலத்தில் வரும் பல படங்களில் நகைச்சுவை என்பது மிகக் குறைந்த அளவே இருக்கிறது. தியேட்டர்களுக்கு என்டர்டெயின்மெட்டுக்காகச் செல்லும் ரசிகர்களுக்கு இம்மாதிரியான படங்கள்தான் முழு என்டர்டெயின்மென்ட்.

கானா பாடகர் சந்தானத்திற்கும், கல்லூரி மாணவி அனைகாவிற்கும் காதல். காதலர்களைப் பிரித்து வைப்பதையே தன்னுடைய முக்கிய வேலையாக வைத்திருக்கும் சந்தானத்தின் அப்பா பிருத்விராஜுக்கு மகன் காதல் பற்றி தெரிய வந்ததும் அதிர்ச்சி. சந்தானம் காதலிக்கும் அனைகா வேறு யாருமில்லை, அவருடைய இரண்டாவது மனைவியின் மகள். இப்படி ஒரு சூழலில் அடுத்து என்ன என்பதுதான் படத்தின் கதை.

சந்தானம் அவர் வரும் காட்சிகள் அனைத்திலுமே தன்னுடைய முத்திரையைத் தவறாமல் பதித்துவிடுகிறார். தான்தான் கதாநாயகன் என்பதால் தனக்கு மட்டும் முக்கியத்துவம் இல்லாமல், தன்னைப் போலவே மற்றவர்களுக்கு நகைச்சுவையில் கலக்குவதற்கு வாய்ப்புகளைக் கொடுத்திருக்கிறார். சந்தானத்தின் அப்பாவாக நடித்திருக்கும் தெலுங்கு நடிகர் பிருத்விராஜ், அவரைக் கொல்லத் துடிக்கும் மொட்ட ராஜேந்திரன், அவரது வலதுகை மாறன், தங்கதுரை, சந்தானத்தின் நண்பர்கள், கிளைமாக்சில் கொஞ்ச நேரமே வரும் சேஷு என அனைவருமே காமெடியில் ஒரு கலக்கு கலக்ககிறார்கள்.

அண்ணன், தங்கை இருவருக்கும் காதலா என அந்த உண்மை தெரிய வரும் போது அதிர்ச்சியாக இருந்தாலும், படத்தில் அதை லாவகமாகக் கையாண்டிருக்கிறார் இயக்குனர் ஜான்சன்.

சந்தோஷ் நாராயணன் இசையில் சில கானா பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. படத்தின் கடைசி அரை மணி நேரம் கிரேஸி மோகன் வசனம் எழுதிய பத்து படம், சுந்தர் .சி இயக்கிய ஐந்து படம் பார்த்த திருப்தியைத் தருகிறது.