செல்வராகவன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ், இந்துஜா, எல்லி அவ்ராம் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன், தனுஷ், யுவன் கூட்டணி முண்டும் இணைந்துள்ள படம்.

கதிர், பிரபு என இரட்டையர்களாக, இரு வேடங்களில் தனுஷ் நடித்துள்ளார். சில விரும்பத்தகாத நிகழ்வுகளால் சிறு வயதிலேயே கதிர் அவரது குடும்பத்தை விட்டு கைவிடப்பட அவர் எங்கெங்கோ செல்கிறார். இருபது வருடங்களுக்குப் பிறகு பிரபு, மனைவி, மகள் என குடும்ப வாழ்க்கையில் இருக்கிறார். பிரபுவின் மகளின் நடவடிக்கைகள் திடீரென மாறுகின்றன. அவரை ஒரு பேய் பிடித்திருக்கிறது என்பதை பிரபு அறிகிறார். அந்தப் பேய் பிரபுவின் அண்ணனான கதிரைக் கொன்றால் போய்விடுகிறேன் என பிரபுவிடம் கேட்கிறது. இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இரண்டு வேடங்களில், அதுவும் இரட்டையர்களாக தனுஷ். பிரபு கதாபாத்திரத்தில் அன்பான அப்பா, கணவன். கதிர் கதாபாத்திரத்திலும் அன்பான அப்பா, கணவன் தான், ஆனால், சைக்கோத்தனமானவர். ஒரு கட்டத்தில் தனது மனைவி, மகனையே கொல்லும் அளவிற்கு நடந்து கொள்பவர். ஒரு கதாபாத்திரத்தில் அன்பு, அமைதி என்றால் மற்றொரு கதாபாத்திரத்தில் அதற்கு நேர்மாறாக ஆவேசம், வெறி. இரண்டிலுமே அவரது நடிப்புதான் படத்தைத் தூக்கி நிறுத்துகிறது.

ஒரு தனுஷிற்கு மனைவியாக இந்துஜா. இவர்களது மகளாக ஹியா தவே. தனக்குள் பேய் புகுந்ததால் இவரது நடவடிக்கைகள் மாறுகிறது. அடிக்கடி தனது நடிப்பால் பயமுறத்துகிறார். மற்றொரு தனுஷிற்கு ஜோடியாக எல்லி அவ்ராம். இவர்களது மகன்களாக பிரபவ், பிரணவ். இருவருமே மிக இயல்பாய் நடித்திருக்கிறார்கள். மனநல மருத்துவராக பிரபு.

யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்குப் பெரிய பிளஸ் பாயின்ட். த்ரில்லர் படங்களில் இதுவரை பார்த்திராத பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு மலைக் காட்சிகளிலும், இரவு நேரக் காட்சிகளிலும் கதைக்கேற்ற பயத்தை ஏற்படுத்துகிறது.

இடைவேளைக்குப் பின்பு இரண்டு தனுஷ் இடம் பெறும் காட்சிகள் இன்னும் கூடுதலாக இருந்து அவர்களுக்கிடையிலான மோதலை வைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

வித்தியாசமான த்ரில்லர் படத்தைப் பார்த்த திருப்தி ஏற்படும்.