நாய் சேகர் - விமர்சனம்

16 Jan 2022

படத்தின் துவக்கத்திலேயே டைட்டில் கார்டில் லாஜிக் பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்கள். இந்த பேன்டஸி கதையில் லாஜிப் பார்ப்பதும் தேவையற்றது. 

சிறு வயதிலிருந்தே நாயைக் கண்டாலே பிடிக்காதவர் சதீஷ். ஐ.டி.கம்பெனியில் வேலை செய்யும் அவரை பக்கத்து வீட்டு நாய் ஒன்று கடித்து விடுகிறது. அது சாதாரண நாய் கிடையாது, ஆராய்ச்சிக்காக வளர்க்கப்படும் நாய். ஜார்ஜ் மரியான் தான் ஆராய்ச்சியாளர். நாய் கடித்ததால் சதீஷுக்கு நாய் குணமும், நாய்க்கு மனிதனின் குணமும் வந்துவிடுகிறது. இதனால், சதீஷுக்குப் பல பிரச்சினைகள் வர அவற்றிலிருந்து அவர் எப்படி தப்பித்தார் என்பதுதான் படத்தின் கதை. 

நகைச்சவை நடிகராக இருந்து நாயகனாக மாறியிருக்கிறார் சதீஷ். முதல் படத்திலேயே தனக்குப் பொருத்தமான ஒரு கதையைத் தேர்வு செய்து நடித்திருக்கிறார். தன்னுடைய வழக்கமான நகைச்சுவை நடிப்பு மீட்டரில் இருந்து கூடுதலாக எதையும் செய்யவில்லை சதீஷ். நாயகனாக நடித்தாலும் அதுவே போதும் என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது.

பவித்ர லட்சுமி படத்தின் கதாநாயகி. சிரித்த முகத்துடனேயே வலம் வருகிறார். 

சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஜார்ஜ் மரியானுக்கு படத்தில் முக்கியமான கதாபாத்திரம். அரை குறை, ஆர்வக் கோளாறு ஆராய்ச்சியாளராக பொருத்தமாக நடித்து கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பெயர் வாங்கி விடுகிறார்.

வில்லனாக பழம் பெரும் இசையமைப்பாளர் கணேஷ். அவருடைய வித்தியாசமான தோற்றமும், பாட்டுப் பாடி செய்யும் வில்லத்தனமும் சிரிப்பை வரவழைக்கிறது. அவருக்கு அடியாளாக இருக்கும் மாறன் அடிக்கடி சிரிக்க வைக்கிறார்.

கொஞ்ச நேரமே வந்தாலும் இளவரசு, லிவிங்ஸ்டன், ஞானசம்பந்தன், ஸ்ரீமன் அட, சொல்ல வைக்கிறார்கள்.

இடைவேளை வரை கொஞ்சம் குறைவான சுவாரசியத்துடன் நகரும் கதை, இடைவேளைக்குப் பிறகு கூடுதல் நகைச்சுவைக் காட்சிகளுடன் சுவாரசியமாய் ரசிக்க வைக்கிறது.

Tags: naai sekar, sathish, kishore rajkumar, ajesh

Share via: